ரெயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு

259 0

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என முன்னாள் ரெயில்வே மந்திரி ஏ.கே. மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரெயில்வே மந்திரி ஏ.கே.மூர்த்தி ரெயில்வே பட்ஜெட் பற்றி கூறியதாவது:-

ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்ததால் எந்த பயனும் ஏற்படாது. ரெயில்வே துறை தனித்து செயல்படும் போது புதிய திட்டங்களை அந்த துறையே முடிவு செய்ய முடியும். இனி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எல்லா வி‌ஷயங்களுக்கும் கேபினட்டில் ஒப்புதல் பெற வேண்டியதுவரும். இதனால் காலதாமதம்தான் ஏற்படும்.

பஸ்சை விட மக்கள் ரெயில் பயணத்தைத்தான் பாதுகாப்பானதாகவும், சுகமானதாகவும் எண்ணி நம்பிக்கையுடன் பயணம் செய்கிறார்கள். இது ஒரு மக்கள் சேவை.

ரெயில் பயணிகள் வசதிக்காக எதுவும் செய்யவில்லையே சுத்தமான ரெயில் பெட்டிகள், தடையில்லாத தண்ணீர், அழகான மின் விளக்குகள், சொகுசான இருக்கைகள் என்று ரெயிலில் பல வசதிகள் செய்து கொடுக்க முடியும்.

மணிக்கணக்கில் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு பொழுதுபோக்கிற்கு என்ன வசதி செய்து இருக்கிறார்கள்?

நான் மந்திரியாக இருந்த போது கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கு வசதியாக தொட்டில் அமைப்பது, மருத்துவ குழுவுடன் தனி கோச் இணைப்பது ஆகியவற்றை கொண்டுவர திட்டமிட்டேன். அதற்கு பிறகு வந்த மந்திரிகள் கண்டு கொள்ளவில்லை.

பயணிகள் உல்லாச பயணம் செல்வது போல் ரெயில் பெட்டிகள் பிரமாதமாக செய்ய முடியும். ஆனால் எதையும் செய்யவில்லை.

ரெயில்வே திட்டத்துக்கு கேரளாவை விட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. கேரளாவில் ரெயில்வே கோட்டங்கள் 3 தான். ஆனால் தமிழகத்தில் எத்தனை ரெயில்வே கோட்டங்கள் உள்ளன? அந்த அடிப்படையில் பார்த்தால் நிதி குறைவு என்பதுதான் உண்மை.

சென்னை- புதுவைக்கு புது வழிப்பாதை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது 100 கோடிதான் மதிப்பிடப்பட்டது. இப்போது கிழக்கு கடற்கரை சாலை எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் நல்ல பலன் கிடைத்து இருக்கும். அதை கண்டு கொள்ளவில்லை.

ரெயில்வே துறையில் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் யாரும் அக்கறை எடுப்பதில்லை என்பதுதான் உண்மை.

மாடி ரெயில் பெங்களூருக்கு விடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு மாடி ரெயில்கள் விடலாம். காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு ரெயில் இயக்கப்பட வேண்டும். 4 மணி நேரத்தில் மதுரை செல்ல வேண்டும், தாம்பரம், விழுப்புரம், திருச்சி ஆகிய 6 நிறுத்தங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். இப்படி ரெயில் இயக்கினால் சென்னைக்கு குடி பெயர்பவர்களின் எண்ணிக்கை குறையும். தினமும் ரெயிலில் வந்து வேலை பார்த்து செல்வார்கள். இதே போல் தினமும் 3 ரெயில்கள் இயக்கலாமே.

வெறும் திட்டம் மட்டும் போட்டால் போதாது நடைமுறை வாழ்க்கையோடு பார்க்க வேண்டும். 100 கோடியில் ஒரு திட்டம் போட்டால் டெண்டர் விட, டெண்டர் திறக்க, பணி ஒப்பந்தம் கொடுக்க என்பதில் ஆறு அல்லது 7 மாதம் ஓடிப் போகிறது. அதன் பிறகு மூன்று அல்லது நான்கு மாதங்களில் 10 கோடி அளவுக்கு வேலை நடக்கும். அதற்குள் அடுத்த பட்ஜெட் வந்து விடும். நிதி அனைத்தும் திருப்பி அனுப்பப்படும்.

வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். எளிதாக்க வேண்டும் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தனியார்கள் லாபம் அடைவார்கள். பயணிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.இவ்வாறு அவர் கூறினார்.