நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

230 0

நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாகாண நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் முதலான அனைத்து நீதிமன்றங்களிலுமுள்ள வெற்றிடங்களைக் கருத்திற்கொண்டே இந்த பணியாளர்கள் நியமனம் இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சினால் கடந்த காலங்களில் ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள நீதவான் நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், மாகாண நீதிமன்றங்கள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான கட்டிடங்களை நிர்மானித்தல் காரியாலய உபகரணங்கள் என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்து நானூறு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கணினிமயப்படுத்தி ஆவணங்களை களஞ்சியப்படுத்தி பாதுகாக்க விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் நீதி அமைச்சு கூறியுள்ளது.