அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வருக்கு எதிராக வழக்கு

270 0

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர்களில் ஒருவர் அனுமதியின்றி அரச சொத்துக்களை உடைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளது.

கண்டி கலஹா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அதனை குத்தகைக்கு எடுத்தவர் மீண்டும் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைத்த பின்னர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் கட்டடத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை காணாமல் போக செய்ததாக அமைச்சரின் புதல்வருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் கூட்டுத்தாபனத்திடம் அனுமதியை பெறாமல் நிலத்தடியில் எண்ணெய் தாங்கி ஒன்றை நிர்மாணித்துள்ளதாக பிரதேச முகாமையாளர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி. ஜயசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கலஹா நகரில் உள்ள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைந்துள்ள காணியுடன் மேலும் 10 பேர்ச்சஸ் காணி துண்டு இணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த காணி அனுமதியின்றி பெற்றுக்கொள்ளப்பட்ட காணி உறுதியற்ற அரசுக்கு சொந்தமான காணி என்பது கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.