தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்-நிசாந்த சிறி வர்னசிங்க

239 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிக்கான பொறுப்பினை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர் கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த கொலை முயற்சிக்கான பொறுப்பினை தமிழ் சமூகத்தில் கடும்போக்குவாதத்தை வியாபிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இனவாத பிரிவினைவாத அரசியலிலிருந்து விலகி தேசிய அரசியலில் கால் பதிக்க இனியேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவர்கள் உயிர்களினால் அதற்கான இழப்பினை செலுத்த நேரிடும்.

தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி பாராட்டக்கூடிய மனம் கூட சுமந்திரனிடம் இல்லாமை வருத்தமளிக்கின்றது.

ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வரும் அரசியல் தலைவர்களை கொலை செய்ய முயற்சிக்கப்படும் நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொள்ளும் போது நாட்டின் தேசிப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவே தென்படுகின்றது.

எனவே தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித நெகிழ்வுப் போக்கினையும் அரசாங்கம் பின்பற்றக்கூடாது என நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.