டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை

241 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை ஒன்றினை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது.

நுழைவு அனுமதி பெற்ற நிலையில் அமெரிக்காவில் அகதிகளாக உள்ளவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை நிறுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க சிவில் விடுதலை ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

நேற்று அமுல்படுத்தப்பட்ட இந்த புதிய திட்டத்திற்கு அமைய நாடுகடத்தும் நோக்கில் சுமார் 200 பேர் வாநூர்த்தி நிலையங்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உட்பட பல உலக நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியுடனான உரையாடலின் போது, அமெரிக்காவும், ரஷ்யாவும் சர்வதேச பயங்கரவாதிகளாக செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, ஜப்பான், ஜேமனி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய தலைவர்களுடனும் சர்வதேச விவகாரங்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப தொலைபேசியின் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது முக்கியமாக சர்வதேச பயங்கரவாதம், மத்திய கிழக்கு மற்றும் அராபிய இஸ்ரேலிய மோதல், அணு ஆயுத கட்டுப்பாடு, வட தென் கொரிய முரண்பாடு மற்றும் யுக்ரேன் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.