ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் -ரஞ்சன் ராமநாயக்க

289 0

எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, பிள்ளைகளும் இல்லை யாராக இருந்தாலும் நேரடியாக மோதுகின்றவனே நான் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவனே நான் யாருக்கும் அச்சம் இல்லை எவருக்கும் பணிந்தவனும் இல்லை.

ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என நினைப்பவனே நான் எவருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல.

இதனை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் வீடும் இல்லை வாகனமும் இல்லை அதனால் நேராக ஒரு பேச்சு ஒரு செயல் என உண்மை பேசுகின்றவனே நான் எனவும் ரஞ்சன் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில்,

நுகேகொடையில் இடம் பெற்ற கூட்டத்தில் நல்லாட்சியில் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மேடை ஏறுவார்கள் எனக் கூறினார்கள்.

ஆனால் அங்கு ஒரு பிரதேச சபை உறுப்பினரும் கூட மேடை ஏறவில்லை இது வேடிக்கையான விடயம்.

அது மட்டுமல்ல ஆட்சியை கவிழ்ப்பேன் என்று என்னிடம் கூறியபோது நான் ஒரு மாதகாலம் இருக்கமாட்டேன் முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துக் கொள்ளுங்கள் என பகிரங்கமாக கூறிவிட்டே வெளிநாடு சென்றேன்.

நான் கூறிய சவாலை விட்டு விட்டு இப்போது மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்புக்காக கால அவகாசம் கேட்கின்றார்கள்.

ஜனவரி மாதம் ஆட்சியைக் கவிழ்ப்போம் என பகிரங்கமாக கூறியவர்களே இப்போது பின்வாங்குகின்றார்கள். அவர்களுக்கு ஆட்சி கவிழ்ப்பு சாத்தியம் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.