அரச கொடுப்பனவு 25ஆயிரம் ரூபா கிடைக்காதவர்களுக்கு மீளவும் வழங்கப்படும் – றிசாட்

216 0

இறுதி யுத்தத்தின் பின்னர் செட்டிக்குளம் மெனிக்பாமில் இருந்து வட பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களின் அரச கொடுப்பனவான 25 ஆயிரம் ரூபா கிடைக்காதவர்களின் பட்டியலை சமர்ப்பிக்கும் பட்சத்தில் தற்போதும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின்போது செட்டிகுளம் மெனிக்பாமில் இருந்து மீள்குடியேறிய அனைவருக்கும் யு.என்.எச்.சீ.ஆர் தொண்டு நிறுவனம் வழங்கிய 25 ஆயிரம் ரூபா பணம் அனைவருக்கும் கிடைத்தபோதும் அரசினால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா பணம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு கிடைக்காத நிலமையே இன்றுவரையில் உள்ளது. அத்துடன் இவ்வாறு வழங்கப்படாத பணங்களிற்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சகல பி்தேச செயலாளர் அலுவலகங்களும் பயணாளிகளை அழைத்து ஒப்பம் பெற்றனர். ஆனால் இன்றுவரை அப்பணம் வழங்கப்படவில்லை என அந்த மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது எனக் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

இறுதி யுத்தத்தின் பின்னர் செட்டிக்குளம் மெனிக்பாமில் இருந்து மீளக்குடியமர்ந்த மக்களிற்கு யு.என்.எச்.சீ.ஆர். மற்றும் அரசு என 25 ஆயிரம் ரூபா வீதம் 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. இதில் அரச கொடுப்பனவான இரண்டாவது 25 ஆயிரம் ரூபா பணம் ஆயிரக்கணக்கான குடும்பங்களிற்கு கிடைக்கவில்லை என்பது தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. அத்துடன் யாழ். மாவட்டத்தினில் பணம் வழங்கவேண்டியவர்களிடம் ஒப்பம் பெறப்பட்டதான பட்டியல் இருப்பின் அதனை வழங்கினால் தற்போதும் அப்பணம் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய முடியும் .

யாழ். மாவட்டத்திலும் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படாத பல ஆயிரம்பேர் உள்ளதாக வடக்கு மாகாண சபை வரைக்கும் குறித்த விடயம் பிராஸ்தாபிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.