சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
காணாமல்போனோர் பிரச்சனையைக் கையாள்வதற்காக, காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்குவதற்கான சட்டம் ஒன்று கடந்த ஆண்டு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை முன்வைக்கவிருப்பதாக ஜேவிபி கூறிவந்ததையடுத்து சிறீலங்கா அரசாங்கம் அதனை இழுத்தடிப்புச் செய்துவந்தது.
இந்நிலையில், சென்ற வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் பணியகத்தைத் திறந்துவைக்கும்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் காணாமல்போனோர் பணியகம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், ஜேவிபி கட்சியினர் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்த பின்னர் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்தச் சட்டம் தொடர்பாக தனது கரிசனையை வெளியிட்டு, சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இதனை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன கெட்டியாராச்சி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, காணாமல்போனோர் அலுவலகத்துக்கு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை போட்டுவருகின்றது என்ற கருத்தை நிராகரித்த அவர், இராணுவ நிலைகளுக்குள் நுழைந்து தேடுதல் நடத்த அனுமதித்தல் உள்ளிட்ட, இந்தச் சட்டத்தின் சில பிரிவுகள் தொடர்பாக, கரிசனை வெளியிட்டு சிறீலங்கா ஆட்சியாளருக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

