நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்நிலையில் ஸ்தீரத்தன்மையை பேணினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள முடியும்.
அரச முறை கடன் செலுத்தல் மீள்பரிசீலனை செய்யப்பட்டு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தின் போது சிறப்பு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என ஆராய்ந்தால் பல காலங்கள் முன்நோக்கி செல்ல நேரிடும். அவ்வாறு சென்றால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. பல காரணிகளின் நிமித்தம் நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு வருட காலத்திற்குள் பாரிய பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. அதனை எவருக்கும் மறுக்க முடியாது.
கொவிட் தாக்கத்திற்கு முன்னரான மதிப்பீடுகளை கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஒப்பிட முடியாது. வரி நீக்கம் கொவிட் தாக்கத்தினால் தீவிரமடையும் என எதிர்பார்க்கவில்லை. வரிச்சலுகை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
அரசியல் ஸ்தீரமற்ற தன்மை நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். வெளிநாட்டு கடனை மீள் செலுத்தும் நிலைமையில் நாடு இல்லை என்பதை சிறு பிள்ளை கூட நன்கு அறியும். நெருக்கடிக்கு தீர்வு காணாவிடின் பாரிய எதிர்விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும்.
டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. டொலர் நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு எதிர்தரப்பினர் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது என குறிப்பிடுகிறார்கள். 2021 ஆம் ஆண்டு டொலர் விநியோக இடைவெளி 8 பில்லியன் அளவு உயர்வடைந்துள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் கடன்களை மீள் செலுத்துவதா ? வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்புடன் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதா என்ற இரு பிரதான முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. கடன் மீள் செலுத்தாவிட்டாலும் பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசமுறை கடன் செலுத்தல் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். நாட்டு மக்களினதும், சர்வதேசத்தினதும், சர்வதேச நிதி நிறுவனங்களினதும் நம்பிக்கையை பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது
சர்வதேச நிதி நிறுவனங்கள், இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். கடன் செலுத்தலுக்கு காலவகாசம் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதன் ஊடாக சர்வதேசத்தினதும், சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 வருட காலத்திற்கு 3 பில்லியன் நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்த நாட்டில் ஸ்தீரமான தன்மை பேணப்பட வேண்டும்.
தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவும், பிரச்சினைக்கு தீர்வு காணவும் எதிர் தரப்பினர் தயாராகவில்லை.ஆகவே இது அரசியல் செய்யும் தருணமல்ல. நாடு ஸ்தீரமன்மையில் காணப்பட்டால் மாத்திரமே டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். எம்மால் பொறுமையுடன் இருக்க முடியாது. விரைவாக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
சிறந்த நோக்கத்துடன் ஜனாதிபதி நாட்டை நிர்வகித்தார். ஒரு சிலரது தவறான தீர்மானங்களினால் நெருக்கடி நிலையை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.தீர்மானமிக்க சூழ்நிலையில் எம்மால் சுயநலமாக செய்ய முடியாது.ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலின் வீழ்ச்சி பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் முன்னேற்றமடைந்த சுற்றுலாத்துறை நாட்டின் தற்போதைய அமைதியற்ற நிலையால் சுற்றுலாத்துறை மீண்டும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளமை நல்லதொரு நிலைமையல்ல.
ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.மக்களின் போராட்டம் அரசமைப்பிற்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.எதிர்தரப்பினர் பெரும்பான்மையை நிரூபித்தால் அரசாங்கத்தை கையளிக்க தயார்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது. மாற்று திட்டங்களை தொடர்ந்து வரவேற்கிறோம். வாத பிரதிவாதங்களினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றார்.

