சன் சீ கப்பல் விவகாரம் – நான்கு பேரில் மூவர் குற்றமற்றவர்கள்

251 0

சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு தமிழர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

குனாரொபின்சன் கிறிஸ்துராஜா, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு, 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்கலாக 492 பயணிகள் சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், குறித்த நால்வருக்கும் எதிராக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என அறங் குறுநர்கள் நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டதாக கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும், குனாரொபின்சன் கிறிஸ்துராஜா தொடர்பில் தகவல் அறியமுடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துராஜா என்பவர் குறித்த கப்பலுக்கு சொந்தக்காரராக செயற்பட்டுள்ளதுடன், இம்மானுவேல் குறித்த கப்பலின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

தனது தரப்பினரான கிறிஸ்துராஜா குறித்த பயணிகளிடம் இருந்து பணம் பறித்துக் கொண்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இலங்கை, உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்கள் தப்பிப்பதற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளார் என கிறிஸ்துராஜாவின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அவர் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பொன்றை அறிவிக்கவில்லை என கனேடிய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.