தமிழகத்தில் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல்

244 0

தமிழக உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளின்படி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். சட்டவிதிகளை பின்பற்றி புதிய தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘உள்ளாட்சி தேர்தலை வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்துள்ள உத்தரவில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் பல உள்ளன. அதுதொடர்பாக வாதம் செய்ய ஒருநாள் முழுவதும் தேவைப்படுகிறது. அதனால், இந்த வழக்கு விசாரணையை 5 வாரத்துக்கு தள்ளிவைக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். ‘இந்த வழக்கை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று நீங்கள் வாதம் செய்யுங்கள்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் எதிர்மனுதாரரான தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘தனி நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு மிகவும் சரியானது. குற்றப்பின்னணி உள்ளவர்கள் குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடும்போது, அதை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது’ என்று வாதிட்டார். இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைப்பதாக கூறினார்கள்.