சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த கலவரத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்த 142 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வழங்கினார்.
சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த கலவரத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு 142 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனையிலும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். காயம் அடைந்த போலீசாரிடம் சமூக விரோதிகளால் எவ்வாறு தாக்கப்பட்டனர்? என்று கேட்டறிந்தார்.
காயம் அடைந்த போலீசாருக்கு போலீஸ் நலஉதவி நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை கமிஷனர் ஜார்ஜ் நேரடியாக வழங்கினார். இணை கமிஷனர் சந்தோஷ்குமாரின் கார் டிரைவர் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் வன்முறையாளர்களால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார்.
பலத்த காயத்துடன் சிகிச்சை பெறும் அவருக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கி கமிஷனர் ஆறுதல் கூறினார். கமிஷனர் ஜார்ஜ் உடன் கூடுதல் கமிஷனர் சேஷசாயி சென்றார். பின்னர் சேஷசாயி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இணை கமிஷனர் சந்தோஷ்குமாரின் டிரைவர் செந்தில் குமாரை கொலை செய்யும் நோக்கத்தோடு வன்முறையாளர்கள் தாக்கி இருக்கிறார்கள். நல்லவேளையாக போலீஸ் படையினர் அவரை காப்பாற்றிவிட்டனர். சென்னை நகர் முழுக்க வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
215 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 100 வன்முறையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். சமூக வலைதளங்களில் போலீசாரை பற்றி தவறான தகவல்களையும், இழிவான தகவல்களையும் சில விஷமிகள் பரப்பி வருகிறார்கள்.
முக்கிய தலைவர்களையும் இழிவாக பேசி ‘வாட்ஸ்அப்’ மூலம் தகவல் பரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சிலர் எங்களை சந்தித்து பேசும்போது மாணவர்களின் போராட்டத்தை நல்லபடியாக கையாண்டீர்கள். உயிர்ச்சேதம் இல்லாமல் வன்முறை போராட்டத்தை அடக்கிவிட்டீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அவ்வாறு பாராட்டுபவர்கள் பத்திரிகைகளில் வேறுவிதமாக செய்தி கொடுக்கிறார்கள்.
போலீசார் தான் கலவரத்தை தூண்டினார்கள் என்று தவறான தகவலை வெளியிடுகிறார்கள். மனசாட்சியே இல்லாமல் போலீசாரை குறை கூறுகிறார்கள். போலீசார் அடிபட்டது பற்றி அவர்கள் வருத்தம் தெரிவிக்காதது வேதனையாக உள்ளது.
வாகனத்தை போலீசார் சேதப்படுத்துவதாக ஒரு வீடியோ காட்சியை திரும்ப திரும்ப வெளியிட்டு பிரச்சினையை திசைதிருப்புகிறார்கள். அந்த வீடியோ காட்சியில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது இணை கமிஷனர் சந்தோஷ்குமார், துணை கமிஷனர்கள் ஜெயகுமார், ராதிகா ஆகியோரும் உடன் இருந்தனர்.

