நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

243 0

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் பெரியாறு அணை உள்ளது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

மேலும் தேனி மற்றும் மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. பருவமழை பொய்த்து போனதால் எங்கும் வறட்சி ஏற்பட்டது. விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு மழையை எதிர்பார்த்திருந்தனர்.

கன்னியாகுமரி அருகே உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று வரை நீர்வரத்து 100 கன அடியாக இருந்தது. இன்று காலை 1197 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் அணையின் நீர்மட்டம் ½ அடி உயர்ந்து 110.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. வைகை அணை நீர்மட்டம் 25.36 அடியாக உள்ளது. நீர்வரத்து 17 கன அடி. மதுரை மாநகர் குடிநீருக்காக மட்டும் 40 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை 34.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணை 54.44 அடி. வருகின்ற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மழை அளவு மி.மீ. வருமாறு:-

பெரியாறு 7.2, தேக்கடி 2.8, உத்தமபாளையம் 1, சண்முகாநதிஅணை 2, வைகை அணை 4.4., மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 2, தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்தால் மட்டுமே கோடை காலத்தை சமாளிக்க முடியும்.