பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து உடனடியாகக் கலந்துரையாடுங்கள் – ஐ.நா வலியுறுத்தல்

220 0

இலங்கையில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கம் பொருளாதார நெருக்கடியை செயற்திறனான முறையில் கையாள்வதற்கான அரசியல் இயலுமையை வலுவிழக்கச்செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கான தீர்வு குறித்து அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஆகிய முத்தரப்பினரும் உடனடியாக அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையகாலங்களில் இலங்கையின் நிலைவரம் மிகமோசமடைந்துவருகின்றது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன் (அவசரகாலநிலை இரத்துச்செய்யப்படுவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கை) மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அமைதிப்போராட்டங்கள் மூலம் தமது பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை வெளிக்காட்டுவதற்கான மக்களின் உரிமையை முடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தகைய நடவடிக்கைகள் மிகுந்த கரிசனையைத் தோற்றுவித்திருக்கின்றன. அத்தோடு அவை பொதுமக்களின் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பான கருத்துப்பரிமாற்றங்களுக்கும் இடையூறு விளைவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் அமைதியானமுறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுடன் இணைந்ததாக மக்களின் ஆற்றாமை அதிகரித்துவருகின்றது. எதுஎவ்வாறெனினும் எரிபொரும், சமையல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஆகியவற்றுக்கான சடுதியான தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அதிகரித்துவரும் பணவீக்கம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கடந்த இருவாரங்களாகத் தொடரும் மின்துண்டிப்பு என்பன தற்போதைய நிலைவரத்தை மேலும் மோசமாக்கியுள்ளன.

இதன் விளைவாக உயர்வடைந்துள்ள வாழ்க்கைச்செலவு அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில்கூட காணப்படும் சிக்கல்கள் என்பன, பாதிக்கப்பட்ட மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்பேற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகக் கடந்த மாதம் 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையடுத்து, இம்மாதம் முதலாம் திகதி அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியது. அதேவேளை 2 ஆம் திகதி 36 மணிநேர ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அந்நாளில் 15 மணித்தியாலங்கள் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முழுமையாக முடக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது பொலிஸாரால் வன்முறை பிரயோகிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுளளன.

அவசரகாலச்சட்டத்துடன் தொடர்புடையதாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவானவையாக இருக்கவேண்டும் என்பதை இலங்கை அதிகாரிகளுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

அதேபோன்று அதன் பிரயோகமானது அச்சந்தர்ப்பத்திற்குத் தேவையான அளவுடன் மட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அமைதியான ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடாது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நிலைவரங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து அவதானிக்கும்.

அடுத்ததாக கடந்த பெப்ரவரி மாதம் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் மற்றும் வீழ்ச்சிகண்டிருக்கும் கட்டமைப்பு ரீதியான நியாயத்துவம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவை பொருளாதார நெருக்கடியை செயற்திறனான முறையில் கையாள்வதற்கான அரசின் இயலுமை மற்றும் அனைத்துப் பிரஜைகளுக்குமான பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை உறுதிப்பாடு என்பற்றை வலுவிழக்கச்செய்துள்ளது. அதுமாத்திரமன்றி அரசாங்கம் விமர்சனங்களைக் கையாளும் முறை குறித்தும் உயர்ஸ்தானிகர் அவரது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் கரிசனைகளை நாம் மீண்டும் பதிவுசெய்கின்றோம்.

மேலும் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கான தீர்வு குறித்து அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஆகிய முத்தரப்பினரும் உடனடியாக அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.