மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இராணுவத்தில் உள்ள பலர் எட்டாம் தரம் சித்தியடைந்தவர்கள். இவர்கள் ஆவேசப்பட்டு ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட முடியும், எனவே இதனை நிறுத்த வேண்டும் எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற அமர்வுகள் நேற்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி, சீருடை அணிந்து, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் நுழைந்தவர்கள் யார் என்ற கேள்வி எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா,
இலக்கத்தகடுகள் இல்லாத, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களில் ஆயுதத்துடன் இராணுவம் வருவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யார் எவர் என்பது வேறு விடயம். அது குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும்.
அதேபோல் இராணுவ சீருடையில் உள்ள ஒருவரை பொலிசார் தாக்குவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இராணுவம் பொலிசாரை தாக்கினாலும் அதற்கும் நான் எதிராகவே கருத்துக்களை முன்வைப்பேன். எவ்வாறு இருப்பினும் மக்கள்போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியான நேரங்களில் எவரேனும் ஒருவர், இராணுவ வீரரிடம் இருக்கும் துப்பாக்கியை பிடிங்கி, இராணுவத்தினரை நோக்கி சுடக்கூடும் என்பதே இதற்கு காரணம் எனவும் அப்போது நிலைமை விபரீதமாக மாறும்.
எனவே இது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். இலக்கத்தகடுகள் இல்லாது இராணுவம் ஆயுதத்துடன் வந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. எவரேனும் இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. இராணுவத்தில் உள்ள பலர் எட்டாம் தரம் சித்தியடைந்தவர்கள்.
இவர்கள் ஆவேசப்பட்டு ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட முடியும். ஆகவே இது குறித்து சுயாதீனமாக விசாரணைகளை நடத்தி கட்சி பேதம் இல்லாது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இராணுவம் தவறு செய்திருந்தால் அதற்கு எதிராக இராணுவ தளபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் குறித்த பொலிசார் தவறு செய்திருந்தால் அதற்கும் எதிராக பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

