மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை- சிறிசேன

224 0

மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை உள்ளடக்கிய கல்வி தொடர்பான தேசிய கொள்கை முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் நேற்று கைளியிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து தேசிய கொள்கை முன்மொழிவுகள், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

கல்விக்கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வி ஆணைக்குழுவும் தேசிய கல்வி நிறுவனமும் இணைந்து ஆய்வினை மேற்கொண்டன.

ஆய்வின் அடிப்படையில் தேசிய கொள்கை சீர்திருத்தங்களை மேலும் பலப்படுத்தி அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் புதிதாக உருவாகும் தேவைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடியவகையிலும் இந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கல்விக்கொள்கைகளை நோக்கும்போது பாடத்திட்டங்களுக்கு மேலதிகமாக பிள்ளைகள் சுயமாக செயற்படக்கூடிய வகையிலான கொள்கைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் திறமைகளுக்கேற்ற சந்தர்ப்பங்கள் கல்விக்கொள்கைகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் தேவையையும் ஜனாதிபதி விளக்கினார்.

கல்வித்துறையில் மனித வளங்களைப் போன்று பௌதீக வளங்களும் சமமான முறையில் பகிரப்படாதுள்ள பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல பாடசாலைகள் இன்னும் நாட்டில் இருப்பதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டித்தன்மை மற்றும் அப்பரீட்சைகுறித்த பெற்றோர்களின் மனநிலை காரணமாக பிள்ளைகள் முகங்கொடுக்க வேண்டியுள்ள அசௌகரியங்களைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய கல்விக் கொள்கைகளைத் தயாரிக்கும்போது இது தொடர்பாக விரிவாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் மாகாண கல்வி நிறுவனம் என்பன குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் ஒன்றுகூடி புதிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துக்கூறினார்.