சிறிலங்காவில் மங்கி வரும் நீதிக்கான நம்பிக்கை!

73 0

சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் கூறினார்கள்.

ஜனவரி 2015ல் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தனது தேர்தல் பரப்புரைகளில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரமானது முடிவிற்குக் கொண்டுவரப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் இன்னும் சில ஊடகவியலாளர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டே வெளியேறினர்.

அதிபர் சிறிசேனவின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கான அறிகுறி காணப்பட்டது. இவர்களுள் இராணுவத்தினரே அதிகமானவர்களாவர்.

கடந்த செவ்வாயன்று, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக கொழும்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அதிபர் ஆணைக்குழு ஒன்றை சிறிசேன நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளை அனுப்பினார்கள்.

black january (1)

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை மற்றும் ஜனவரி 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் தொலைக்காட்சி கலையகங்கள் அழிக்கப்பட்டமை போன்றவற்றை நினைவுகூரும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த மாதத்தை ‘கறுப்பு ஜனவரி’ எனப் பெயரிட்டு நினைவுகூர்ந்தனர்.

இதில் பங்குபற்றியவர்களில் கடத்தப்பட்ட தனது கணவரான பிரகீத் எக்னெலிகொடவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக ஏழு ஆண்டுகளாகப் போராடிய சந்தியா எக்னெலிகொடவும் ஒருவராவார்.

கடத்தப்பட்ட ஊடகவியலாளரும் கேலிச்சித்திர வடிவமைப்பாளருமான பிரகீத் எக்னெலிகொட ஊழல் மோசடி தொடர்பாகவும் அதிகாரத்துவம் மற்றும் ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம்  தொடர்பாகவும் எழுதியிருந்தார்.  2010 அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் அணிக்கு ஆதரவளித்த எக்னெலிகொட தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர் கடத்தப்பட்டார்.

‘பிரகீத்திற்கு எதிரி என எவரும் கிடையாது. ஆகவே இவர் கடத்தப்பட்டதற்கு மகிந்தவே பொறுப்பாவார். மகிந்தவும் கோத்தபாயவும் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்’ என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

தனது கணவர் இறந்து விட்டதாகவே விசாரணையாளர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கடத்தப்பட்ட பிரகீத் இராணுவ முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கிழக்குக் கரையோரத்திற்கு மாற்றப்பட்டதாக இறுதியில் தகவல் ஒன்று கிடைத்ததாகவும் திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

black january (2)

‘எக்னெலிகொட உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடனேயே எங்களால் வாழ முடிகிறது. அதேவேளையில், இதனை நம்ப முடியாமலும் உள்ளது. ஏனெனில் குற்றப் புலனாய்வுத் துறையினர் எனது கணவர் உயிருடன் இல்லை என்றே என்னிடம் தெரிவித்தனர்’ என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

நீதிக்கான நம்பிக்கையை சிறிசேன அரசாங்கம் எமக்குத் தந்ததாகவும் ஆனால் இதனுடைய அண்மைய நகர்வுகள் தனது நம்பிக்கையை தளர்வடையச் செய்துள்ளதாகவும் திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

பிரகீத் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகிக்கப்பட்ட  இராணுவ வீரர்களை எவ்வித அவசியமுமின்றித் தற்போதும் காவற்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக சிறிசேன தனது உரை ஒன்றில் விமர்சித்திருந்தமை இவர் நீதியைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையை தகர்த்தமைக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளதாக திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

அதிபர் சிறிசேன இவ்வாறு அறிவித்ததற்கு மறுநாள் எக்னெலிகொடவின் கடத்தலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த இராணுவத்தினர் மீண்டும் அவர்களது பழைய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். ஆகவே இந்தச் சம்பவமானது எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு சிறிலங்கா அரசின் ஆதரவு வழங்கப்பட்டமை தெளிவாகிறது என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

‘2015ல் அதிபர் சிறிசேனவை நாங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது சிறிசேன கொண்டிருந்த மனப்பாங்கு தற்போது மாறுபட்டுள்ளமை தெளிவாகிறது’ என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

black january (3)

தனது உரையானது நீதிமன்றின் தீர்ப்பில் செல்வாக்குச் செலுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கவில்லை என சிறிசேன பின்னர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான வழக்குகள் தொடர்பான விசாரணைகள் ‘பெரும் அதிருப்தியை’ வழங்குவதாக பத்திரிகை ஆசிரியரும் செயற்பாட்டாளருமான K.W.ஜனரஞ்சன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களும் ஏனைய குடிமக்களும் அரசாங்கம் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இவர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், ஊடகவியலாளர்கள் ஊடக நெறிகளின் மீது கவனம் செலுத்தியதை விட தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே அதிகளவில் கவனம் செலுத்தியிருந்தனர் என ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டில்ருக்சி ஹந்துநெத்தி தெரிவித்தார்.

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கமும் தமிழ்ப் புலிகளும் பல்வேறு படுகொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டனர். ஆகவே இவ்வாறான கடந்த கால மீறல்கள் விசாரணை செய்யப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என டில்ருக்சி தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – KRISHAN FRANCIS
வழிமூலம்      – Associated Press
மொழியாக்கம் – நித்தியபாரதி