ராஜபக்சவே நாட்டை சீரழித்து வருவதாக கூறிவருகின்றார்கள் ஆனால் உண்மையில் ரணிலே நாட்டை கெடுத்துக் கொண்டு வருகின்றார்

318 0

கூடிய விரைவில் நல்லாட்சி கவிழ்க்கப்படுவது உறுதி, மகிந்த வீட்டு மலசல கூடத்தினை கழுவப்போகின்றார் ஓர் அரசாங்க அமைச்சர் என பெங்கமுவ நாலக தேரர் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் சார்பில் நுகேகொடையில் இன்று இடம்பெற்ற புரட்சியின் ஆரம்பம் எனும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், நுகேகொடையில் இடம் பெறும் கூட்டு எதிர்க்கட்சியின் புரட்சியின் ஆரம்பமான இந்த கூட்டத்திற்கு 5000 இற்கும் அதிகமான மக்களை முடிந்தால் இணைத்துக்காட்டுங்கள்.அப்படி இணைத்தால் மகிந்தவின் வீட்டில் பாத்திரங்களை கழுவுகின்றேன் என அரசு தரப்பு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு இப்போது கூறுகின்றேன் 5000 அல்ல 15000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இன்று இணைந்துவிட்டார்கள்.இப்போது அந்த அமைச்சருக்கு மகிந்த வீட்டின் மலசல கூடத்தை கழுவவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அதற்கு தயாராக இருங்கள்.

ராஜபக்சவே நாட்டை சீரழித்து வருவதாக கூறிவருகின்றார்கள் ஆனால் உண்மையில் ரணிலே நாட்டை கெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.புதிய அரசியல் யாப்பை கொண்டு வந்து நாட்டை பிளவு படுத்தப் போகின்றார்கள். அதற்கு சில தலைவர்களும் ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் அது எந்தவகையிலும் நிறைவேற்றப்படாது. மக்கள் இப்போது ஒன்றிணைந்து விட்டார்கள். அதனால் மக்கள் புரட்சி வெடித்து விட்டது.மகிந்த ராஜபக்சவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது, ஆனால் ரணில் மைத்திரி தரப்பிற்கு எதிர்ப்புகளும், வெறுப்புகளும் அதிகரித்து விட்டது.

எவ்வாறாயினும் கூடிய விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் அதற்கான மக்கள் புரட்சி ஏற்பட்டு விட்டது. அந்த எழுச்சியை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. தாய்நாட்டை காப்பாற்ற எழுச்சி பெற்றுள்ள மக்கள் போராட்டம் வெற்றி பெற நான் பிராத்திக்கின்றேன். வெற்றி நமதே எனவும் நாலக தேரர் தெரிவித்தார்.