ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி(காணொளி)

287 0

 

நுவரெலியாவில், ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹற்றன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்றும் கொட்டகலை பகுதியிலிருந்து ஹற்றனை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் ஹற்றன்-குடாஓயா பிரதான வீதியில் நேர்க்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளானதாகவும், விபத்துக்குள்ளானவர்கள் பத்தனை திம்புள்ள பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியின் சாரதியின் கவனயீனம் காரணமாகவே விபத்து இடம்பெற்றதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பலத்த காயங்களுக்குள்ளான இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து பாரவூர்தியின் சாரதியை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.