மலையக அரசியல் களத்தில் குதித்தார் சந்திரசேகரனின் மகள்!

330 0

சட்டத்தரணி அனுஷா தர்ஷினி சந்திரசேகரனின் வரவானது, மலையக மக்கள் முன்னணிக்கு, மேலும் பலத்தைச் சேர்ப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அவரைக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதிவிக்குள் உள்வாங்குவதற்காக, கட்சியின் மத்தியக்குழு ஏகமனதாக தனது ஆதரவை வழங்கியுள்ளது. எனவே, அவரைக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவிக்குள் உள்வாங்குகின்றோம்” என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“செல்வி அனுஷா, கட்சியில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்தாலும், அவரை நாங்கள், உயர்பீட உறுப்பினர் பதவிக்குள் உள்வாங்கியுள்ளோம். சொந்த வீட்டுக்கு வருபவர்களை வரவேற்க முடியாது. ஆனால், அவரை நாங்கள் வரவேற்கின்றோம். அவரது வருகையானது, கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதோடு, கட்சியின் வளர்ச்சிக்கும் சாதகமாக அமையுமென்று எதிர்பார்க்கின்றோம்” என்றும் அவர் கூறினார்.

மலையக மக்கள் முன்னணின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் புதல்வியான செல்வி அனுஷா தர்ஷினி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். எனவே, அவரை கட்சியின் உயர்பீடத்துக்கு உத்தியோகப்பூர்வமாக வரழைக்கும் நிகழ்வும் நியமன அங்கத்துவப்படிவம் வழங்கும் நிகழ்வும் நேற்று, இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர் கூறியதாவது, “மலையக மக்களின் நலனுக்காக, மலையக மக்கள் முன்னணியும் மலைய தொழிற்சங்க முன்னிணியும் மிக நீண்டகாலமாக, செயலாற்றி வருகின்றது. மலையகம் மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் பெ.சந்திரசேகரனின் மறைவுக்குப் பின்னர், அவரது மனைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன், கட்சியின் நலனுக்காக இணைந்து செயற்பட்டார். ஆனால், வேலைப்பளு காரணமாக, திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரனினால் மலையக மக்கள் முன்னணியின் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுக்க முடியாது போனது. இதன்காரணமாக, அவரது புதல்வியை தொழிற்சங்க செயற்பாட்டில் ஈடுபடுத்துவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்” என, அவர் மேலும் கூறினார்.