உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை – ருவான்

232 0

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த நான்கு நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இன்று மாலை சந்தித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன,

இந்த மக்கள் இன்று தமது போராட்டத்தை தற்காலிமாக விலக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யவுள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, விஜேதாஸ ராஜபக்ஷ மற்றம் காவல்துறைமா அதிபர் ஆகியோருடன் இதன்போது பேச்சுவார்த்தை நடத்துவோம்.

காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்று உறவினர்களுக்கு விளக்கமளிக்க எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனூடாக அந்த மக்களுக்கு ஏதாவது நிவாரணமொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனத் தான் நம்புவதாகவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.