வவுனியாவில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் (காணொளி)

261 0

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அமைதிப்பேரணி ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நான்காவது நாளாக இன்றும் முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

வவுனியா பொது வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்படவிருந்த முச்சக்கர வண்டி சாரதிகளின் பேரணிக்கு பொலிசார் முதலில் தடைவிதித்த போதிலும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் தங்கள் முச்சக்கர வண்டிகளை கொண்டு செல்லாது பொதுமக்களுக்கு இடையூறு விழைவிக்காமல் அமைதியாக பேரணியை நடத்துவதாக வாக்குறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் பேரணிக்கு அனுமதி வழங்கியிருந்தனர்.பேரணி வவுனியா பொது வைத்தியசாலை முன்பாக ஆரம்பித்து கொரவப்பொத்தான வீதிவழியாக வவுனியா பசார் வீதியை சென்றடைந்து அங்கிருந்து உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தை சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆட்டோ சாரதிகள், நாம் ஒப்படைத்த உறவுகள் எங்கே?, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் என்ன, போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.

பேரணி முடிவுற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.