வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு(காணொளி)

262 0

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக, வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தை வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகள் முற்றுகையிட்டனர்.

மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதமிருப்பவர்கள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

அத்துடன்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் அசமந்தபோக்கு தொடர்பாகவும் காரியாலய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்காவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் உறவுகள் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழவுக்கு முறைப்பாடுகள் செய்ததாக கூறியிருந்தனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எத்தனை முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது எனவும், அந்த முறைப்பாட்டிற்கு வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு எந்தவகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் அதிகாரி எஸ்.பிரியதர்சன, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைச் செயலகத்தின் செயலாளர் அம்பிகா சற்குணநாதனுடன் கலந்துரையாடியதாக கூறினார்.

மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளை எழுதித்தருமாறும் அதன் விபரங்களை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்க தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தார்.