கடன்களை அடுத்து வரும் தலைமுறைக்கு விட்டு வைக்க விருப்பமில்லை!

213 0

நாட்டின் கடன்களை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டு வைக்க எனக்கும், ஜனாதிபதிக்கும் விருப்பமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மகரகம நகரில் இளைஞர் பாராளுமன்றத்தின் ஆரம்ப தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் அங்கு அவர் தொடர்கையில்,

எதிர் வரும் 10 வருடங்களுக்கு நாட்டு மக்கள் மீது சுமைகளை சுமத்த முடியாது. எமது வருமானம் இப்போது போதுமானதாக இல்லை இது வேதனையான விடயம்.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டிய தேவை இப்போது காணப்படுகின்றது. அதற்காக ஐ.எம்.எப் நிறுவனத்துடன் இணைந்து நாம் செயற்பட்டு கொண்டு வருகின்றோம்.

நாடு அபாயத்தில் உள்ளது, நாட்டை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் விற்று வருகின்றார்கள் என்று கூறிக்கொண்டு இருந்தால் முன்னேற்றமடைய முடியுமா? வளர்ச்சியடையும் அனைத்து நாடுகளிலும் இந்த நிலை இருக்கின்றது.

நாட்டை விற்க முடியாது, விற்கப்படவும் இல்லை பொருளாதார ரீதியில் பணம் படைத்த நாடுகள் போட்டி போடும் போது நாமும் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் சென்று வேலைப்பார்க்க வேண்டிய தேவை இல்லை, சீனா சென்று படிக்க வேண்டிய தேவையும் இல்லை இந்தியாவின் பொருட்கள் கொண்டு வரவும், சிங்கப்பூரின் மருந்துகளும் கூட எமக்கு தேவைப்படாது.

அனைத்துமே இலங்கையில் கிடைக்கும். துறைமுகங்களும் அபிவிருத்தி திட்டங்களோடு உருவாக்கப்படும். நாடும் வளர்ச்சியடையும், இவை அனைத்தையும் ஒன்றிணைத்து பொருளாதார ரீதியில் பலம் மிக்க நாடாக மாற்றுவதே எமது திட்டம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.