திருகோணமலை துறைமுகம் மீது இந்தியா ஆர்வம்காட்டவில்லையா?

129 0

கடந்த புதன்கிழமை, அதாவது ஜனவரி 18 அன்று இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிப்பதற்கான வரையறைகள் தொடர்பாக சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா விளக்கமளித்திருந்தார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியாவிடம் கையளிப்பது தொடர்பாகப் பேச்சுக்கள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமரின் இந்த அறிவித்தலை கடந்த வெள்ளியன்று இந்தியா மறுத்திருந்தது. நீண்ட கால அடிப்படையில் நலன் பயக்காத இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தியா ஆர்வம் காண்பிக்கவில்லை என இந்திய அறிவித்துள்ளது.

இந்திய மாக்கடலின் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் அமைந்துள்ள இலங்கை தீவானது, தனது துறைமுகங்களை பொருளாதார வலுமிக்க நாடுகளிடம் கையளிக்கும் வழமை காணப்படுகிறது. திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிக்கும் அதேவேளையில், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீதத்தை 99 ஆண்டு காலக் குத்தகைக்கு சீனாவிடம் கையளிக்கத் திட்டமிட்டுள்ளதானது சிறிலங்கா தனது பூகோள அரசியலை சமவலுவுடன் பேணுவதற்கான நகர்வாகும்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்க சிறிலங்கா திட்டமிட்டாலும் கூட இது தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில், இதற்கும் மேலாக அம்பாந்தோட்டையிலுள்ள 15,000 ஏக்கர் நிலத்தில் சீனா 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்களை சிறிலங்கா தற்போது மேற்கொண்டு வருகிறது.

indian-navy-trinco (2)

அத்துடன் கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் 269 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் China Merchants Holdings  என்கின்ற சீன நிறுவனத்தால் புதியதொரு நிதி நகரம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 110 ஹெக்ரேயர் நிலப்பரப்பானது 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.

இதே சீன நிறுவனமே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பொறுப்பேற்கவுள்ளது. இதற்கும் அப்பால், சிறிலங்காவால் சீனாவிடமிருந்து 8 பில்லியன் கடன் பெறப்பட்டுள்ளதால், அதன் மீது இன்னும் அதிகம் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

அயல் நாடுகளான சிறிலங்காவும் இந்தியாவும் தமக்கிடையே பொதுவான வரலாற்று சார் உறவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் காணப்பட்டுள்ளன.

எனினும், அண்மைய ஆண்டுகளில் இந்த நெருக்கமான உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்காவானது சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதே இதற்கான காரணமாகும். தனது பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு விரிவடைவதை இந்தியா எதிர்த்து வருகிறது.

இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளான பங்களாதேஸ், மியான்மார், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா போன்ற நாடுகளில் சீனா தனது காலை அகலப் பதித்து வருகிறது.

சீனாவைப் பொறுத்தளவில் சிறிலங்காவானது அதன் பரந்த அனைத்துலக குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாகக் காணப்படுகிறது. இலங்கைத் தீவானது சீனா மற்றும் அதன் மத்திய கிழக்கு எண்ணெய் வளங்களை வழங்கும் நாடுகளுக்கு மத்தியில் கேந்திர மைய அமைவிடத்தில் அமைந்துள்ளது.

அத்துடன் சீனாவின் 21ம் நூற்றாண்டு கரையோர பட்டுப் பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய நிதி, நிர்வாக மற்றும் கேந்திர மையமாக சிறிலங்கா அமைந்துள்ளது.

vice admiral Aucoin -us- trinco (1)

இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய றோயல் கடற்படையின் தளமாகக் காணப்பட்ட திருகோணமலைத் துறைமுகமானது தென்னாசியாவின் மிக ஆழமான இயற்கைத் துறைமுகமாகவும் கொழும்புத் துறைமுகத்தின் கொள்ளளவை விட பத்து மடங்கு அதிக நீர் மற்றும் நிலப் பரப்பையும் கொண்டுள்ள துறைமுகமாகவும் விளங்குகிறது.

எனினும், திருகோணமலைத் துறைமுகமானது தற்போது மிகவும் குறைவான தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அதாவது கோதுமை மா, சீமெந்து மற்றும் சில உள்ளுர்ப் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கான துறைமுகமாகவே தற்போது திருகோணமலைத் துறைமுகம்  பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய ஆழ்கடல் இயற்கைத் துறைமுகமாகவும் 175 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் மிகவும் ஆடம்பரமான சுற்றுலாத்துறை வலயம் ஒன்றையும் உருவாக்க வேண்டிய தேவை சிறிலங்காவிற்கு எழுந்துள்ளது.

சிறிலங்காவானது கடன் நெருக்கடிக்குத் தள்ளுப்பட்டுள்ளமையும் திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தியை தனித்துத் தானாகவே செய்யக்கூடிய நிதி வளத்தை சிறிலங்கா கொண்டிராமையாலும் இத்திட்டத்தை அனைத்துலக முதலீட்டாளர்கள் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக இந்தியா இத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் சிறிலங்கா விரும்புகிறது.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதன் மூலம் தனது நாட்டின் கரையோரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்குகள் தொடர்பாக இந்தியா விமர்சிக்காது என சிறிலங்கா கருதுகிறது.

அத்துடன் சீனாவின் இந்தச் செல்வாக்கானது காலப்போக்கில் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்கின்ற இந்தியாவின் அச்சத்தைப் போக்குவதற்காக, தனது நாட்டில் எந்த நாடுகளும் முதலீடு செய்ய முன்வரலாம் எனவும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, யப்பான், சிங்கப்பூர் அல்லது சீனா என்கின்ற பேதமின்றி எந்த நாடும் முதலீடு செய்யலாம் என சிறிலங்கா அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் கொழும்பு நிதி நகரம், அம்பாந்தோட்டைத் துறைமுகம், அம்பாந்தோட்டை தொழில்பேட்டை போன்ற பெரிய திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்தியாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான திட்டங்களிலிருந்து இந்தியா ஒருபோதும் வெளிப்படையாக புறக்கணிக்கப்படவில்லை.

சிறிலங்காவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளதாகக் காண்பித்துள்ள அதேவேளையில் சிறிலங்காவின் கட்டுமாண அபிவிருத்திக்காக இந்தியாவால் 2 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே மேலும் மேலும் சிறிலங்காவில் பாரிய முதலீடுகளை செய்ய இந்தியா ஆர்வம் காண்பிக்கவில்லை எனவும் இந்தியாவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவானது தனது உள்நாட்டில் பல்வேறு கட்டுமாணத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அதாவது இந்தியா தனது துறைமுகங்களை நவீனமயப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிலையில் சிறிலங்காவின் திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான எவ்வித திட்டத்தையும் இந்தியா முன்னுரிமைப்படுத்தவில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.

ஆங்கிலத்தில் – Wade Shepard
வழிமூலம்    – Forbes
மொழியாக்கம் – நித்திபாரதி