புதுவை ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்

341 0

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் நடந்த மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை தலைதூக்கிய போதிலும் புதுவையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் கடந்த 17-ந் தேதி முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.புதுவை ரோடியர் மில் திடலில் இரவு-பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் உணவு, பிஸ்கெட், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்டவற்றை வழங்கினர். அதோடு போராட்ட களத்தில் பந்தல், டென்ட், தரை விரிப்பு, சாமியானா பந்தல் ஆகியவையும் அளிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ் வாத்திய இசை குழுவினர், நாதஸ்வர குழுவினர், தாரை தப்பட்டை ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடந்தது. போராட்ட களத்தில் காளை உருவ பொம்மை, காளை மணல் சிற்பம் ஆகியவையும் அமைக்கப்பட்டன.

போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளை அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களே திடலுக்கு அழைத்து சென்று விட்டனர். அதோடு மாலை நேரங்களில் மாணவர்களின் பெற்றோரும், பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.கடந்த 20-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராளிகள் இயக்கம் சார்பில் புதுவையில் பந்த் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா என போராட்டம் நடத்தினர்.

அதோடு அன்றைய தினம் மாணவர்கள் நகர பகுதி முழுவதும் இரு சக்கர வாகனங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றனர். அதேபோல் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை போராட்டக்களமான ரோடியர் மில் திடலில் திருவிழா கோலம் பூண்டது.

நகர், புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்ட களம் வந்தனர். குடும்பத்தோடு பொதுமக்கள் பங்கேற்று ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

போராட்ட களத்தில் மாணவர்கள் ஆக்ரோ‌ஷமாக பேசினாலும் துளிகூட எங்கும் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. அமைதியான முறையிலேயே மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.கடந்த 7 நாட்களாக தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் நேற்றைய தினம் வன்முறை தலை தூக்கிய போதிலும் புதுவையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

மாணவர்கள் நேற்று மாலை முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து போராட்டத்தை முடித்து கொள்வதாக கூறினர். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இல்லாமலும், அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார்.