’தமிழரின் 70 சதவீத நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன’

348 0

வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களில் 70 சதவீதத்தை அரச திணைக்களங்கள் அபகரித்து வைத்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அபகரிக்கப்பட்டுள்ள இந்நிலங்களை வேறு இனத்தவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாகத் தலையீடுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற தாவர, விலங்கினப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வன இலாக்கா திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வன
ஜீவராசிகள் திணைக்களம் ஆகிய நான்கு திணைக்களங்களும், வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து அவற்றை வேறு இனத்தவர்களுக்கு வழங்கி வருவதற்கு எதிராக ,
12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டதில் ஈடுபட்டனர் என்றார்.

இதன்போது கோரிக்கை கடிதம் ஒன்றையும் சமர்ப்பிக்க தயாராகியிருந்தோம். எனினும் ஜனாதிபதியோ அல்லது பொறுப்புவாய்ந்த அமைச்சரவை அமைச்சர்களோ எங்களது கோரிக்கைக் கடிதத்தை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை எனவும் கூறினார்.

வட மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் 44 சதவீதத்தை வன இலாக்க திணைக்களம் அபகரித்து வைத்துள்ளது. இந்த திணைக்களமே வடக்கில் அதிகளவான காணிகளை அபரித்துள்ளது. வடமாகாணத்தில் 888,400 ஹெக்டேயர் நிலப்பரப்பு உள்ளது. இதில் 392,164.6 ஹெக்டயர் நிலங்களை வன இலாக்க திணைக்களம் அபகரித்து வைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 7091.6 ஹெக்டெயர் நிலப்பகுதிகளை மீண்டும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக்க வர்த்தமானி அறிவித்தலை விடுக்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் 70 சதவீதமான நிலங்களை இந்தத் திணைக்களங்கள் அபகரித்து வைத்துள்ளன.எஞ்சியுள்ள 30 சதவீத நிலங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு வடக்கு மாகாண நிலங்களை அபகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாகத் தலையீடுகளை மேற்கொண்டு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.