சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

315 0

வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 21.01.2017 சனிக்கிழமை அன்று ஆர்கவ் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டது.

அழித்துக் கொள்வோம், அடிபணியோம் என்று தம்மை ஆகுதியாக்கி வரலாறாகிய மாவீர வேங்கைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், கவிதாஞ்சலி நிகழ்வுடன் சமகால கருப்பொருளைக் கொண்ட சிறப்புப் பேச்சுக்களும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் இளம் இசைக் கலைஞர்கள் நாதசுரம் மற்றும் வயலின் வாத்தியக் கருவிகளில் எழுச்சிப்பாடல்களை மீட்டியமை மிகவும் சிறப்பாக அமைந்ததுடன் பார்வையாளர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டனர்.

மிக நீண்ட காலங்களிற்கு பின்னர் ஆர்கவ் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வானது எமக்கு நம்பிக்கையைத் தருவதாக அமைந்ததோடு; நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.