முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் வர வேண்டும் – ரமேஷ்

202 0

முதலாளிமார் சம்மேளனமும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு  மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் வர வேண்டும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரண சபையில் வலியுறுத்தினர்.

பெருந்தோட்டத்துறை மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்க முடிந்த சகல ஒத்துழைப்புகளையும் வழங்கும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆண்டில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியை 300 மில்லியன் கிலோ கிராமாக அதிகரிக்க உதவிய சிறுதோட்ட உடமையாளர்கள், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

2020ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதியால்  1.2 பில்லியன் வருமானம் கிடைத்திருந்த நிலையில் கடந்த வருடம்,  தேயிலை ஏற்றுமதியில் 1.3 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயை வழங்க முயற்சித்தோம். ஆனால் அதற்குக் கம்பனிகள் உடன்படவில்லை.

கம்பனிகள் இருப்பதன் காரணத்தினால் தான், அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் சம்பள நிர்ணய சபையின் ஊடாக அவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோட்டத்தொழிலாளர் மீதான உணர்வு காரணமாக உண்மையாக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தோம். பலர் எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்தோம் ஆனால் இதனை எதிர்த்து பெருந்தோட்ட கம்பனிகள் வழங்கு தொடுத்துள்ளனர்.

நாளாந்த சம்பளமாக 800 ரூபாயையும், வருகைக்கான கொடுப்பனவாக நூறு ரூபாயும், உற்பத்திறன் கொடுப்பனவாக நூறு ரூபாயையும் வழங்கி, மொத்தமாக  ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க  பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வந்தன.

எனினும்  தொழிற்சங்கங்கள் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததால், அரசாங்கத்தால் கம்பனிகளின் யோசனைக்கு இணங்க முடியாதுபோனது.

இதனாலேயே, சம்பள நிர்ணயச்சபையின் ஊடாக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்தார் என்றார். எவ்வாறாயினும் பெருந்தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்களும் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் வந்து இரண்டு தரப்பும் இதனை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றோம்.

அரசாங்கமாக எம்மால் செய்ய முடிந்த சகல விடயங்களும் செய்துள்ளோம், இனியும் எம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். பெருந்தோட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் எனவும் அவர் கூறினார்.