தேர்தல் ஆணையம் அதன் சட்ட திட்டங்களை அவ்வப்போது மாற்றி வருகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ந்தேதி சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கடந்த 10-ந்தேதி சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, தம்மம்ப்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூர், ஆகிய பகுதிகளிலும், நேற்று பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, மல்லூர், இளம்பிள்ளை, இடங்கணசாலை, சங்ககிரி, தவூர், அரசிராமணி, பூலாம்பட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம், 6.30 மணிக்கு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை மண்டல பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
இதை தொடர்ந்து 3-வது நாளாக எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். இன்று காலை ஓமலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
ஓமலூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஓமலூர் காடையாம் பட்டி கருப்பூர் ஆகிய பேரூராட்சிகள் அ.தி.மு.க.வின் கோட்டை. தொடர்ந்து அ.தி.மு.க. இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும்.
தற்போது தேர்தல் ஆணையம் அதன் சட்ட திட்டங்களை அவ்வப்போது மாற்றி வருகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அதிகாரத்துடன் செயல்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தின் அவமதிக்குள்ளாவார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு முழுமையாக தெரியும். ஆகவே தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற அரசு அலுவலர்கள், முறையாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நடுநிலையோடு இந்த தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசுக்கு சாதகமாக, ஆளுகின்ற கட்சிக்கு சாதகமாக அவர்கள் ஈடுபட்டால் சட்டரீதியாக நாங்கள் அதை எதிர்க்கொள்வோம். எனவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. முறையாக இந்த தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். அப்படித்தான் நடத்தப்படும் என்ற ஒரு நிலையை நாங்கள் உருவாக்கி காட்டுவோம்.
அதற்காகத்தான் நேற்றைய தினம் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் நடக்கின்ற சம்பவங்களை முன்னாள் அமைச்சர்கள் எடுத்து சொல்லியிருக்கின்றார்கள். ஆளுநர் தேர்தல் ஆணையத்திற்கு தகுந்த காரணத்தை கேட்க இருக்கின்றார். ஆகவே நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும். நடத்தாவிட்டால் நாங்கள் நடக்க வைப்போம்.
தி.மு.க.வுக்கு அ.தி.மு.க.வை எதிர்க்ககூடிய திரானி, தில்லு இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க. தலைவர் நேரடியாக மக்களை சந்தித்து தானே வாக்குகளை கேட்க வேண்டும்.
நான் முதல்- அமைச்சராக இருந்தபோது தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தலை அறிவித்து நேரடியாக நாங்கள் களத்தில் எல்லா இடங்களிலும் சந்தித்தோம். அந்த தெம்பு, திரானி தி.மு.க.வுக்கு இல்லையே. அப்படி இல்லாத காரணத்தினால் தான் முறைகேட்டில் ஈடுபட துடித்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. எப்போதுமே நேர் வழியில் வந்த சரித்திரமே கிடையாது. ஏதாவது தில்லுமுல்லு செய்து, முறைகேடு செய்து, மக்களை ஏமாற்றி வெற்றி வேண்டும் என செயல்படுகிறார்கள். இது 100-க்கு 100 முறியடிக்கப்பட வேண்டும்.
இன்றைக்கு நிலைமை என்ன தேர்தல் ஆணையம் கவனமாக செயல்பட வேண்டும். மேற்கு வங்காளம் என்னாச்சு. அங்கு ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கி விட்டாங்க. செயல்படாமல் வச்சுடாங்க.
அதே நிலைமை இப்படி தொடர்ந்து ஆளுகின்ற தி.மு.க. கட்சி முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்தில் அதே நிலை எதிர்காலத்தில் நடக்கும்.
ஜனநாயக முறைப்படி நடக்கின்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்து, மக்கள் விரோதமாக செயல்பட்டு தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடுமானால் அ.தி.மு.க. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 525 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். நாம்முடைய மக்கள் இதை நம்பி வாக்களித்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஓட்டு போட்ட மக்களை மறந்து விட்டார்கள், ஓரம்கட்டப்பட்டார்கள்.
உதயநிதிஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கு போகும்போது கரூரில், ஒரு நபர் அவரிடம் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது நீங்கள் இங்கு வந்தீர்கள். அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு குடும்ப அட்டை வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என சொன்னீங்களே? 9 மாதங்கள் ஆகியும் ஏன் வழங்கவில்லை. 9 மாதங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் வர வேண்டும். இந்த பணத்தை எப்போது கொடுப்பீங்க என கேட்டார்.
அதற்கு உதயநிதிஸ்டாலின், இன்னும் 4 வருடங்கள் பாக்கி இருக்கிறது, ஏன் அவசரபடுறீங்க? என சொன்னார். ஆகவே இதை வைத்து பார்க்கும்போது 4 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது.
எப்படி மக்களை ஏமாற்றுகீறார்கள். பாருங்க.. அன்றைய தினம் அப்படியா சொன்னீங்க.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்வோம், தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை செயல்படுத்தி காட்டுவோம் என மார்தட்டி பேசினீர்களே. இப்போது வாக்களித்த அந்த மக்களுக்கு ஏன் அவசர படுறீங்க என்ற பதில் தான் சொல்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற முடியாத தி.மு.க. ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் போது தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இதை நம்பி வீட்டில் இருந்த நகைகளை கொண்டு சென்று கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்தனர். இப்படி 48 லட்சம் பேர் நகையை அடமானம் வைத்தனர்.
ஆனால் தற்போது 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி என கூறுகின்றனர். மீதம் உள்ள 35 லட்சம் பேர் கடனாளியானது தான் மிச்சம். பல்வேறு வாக்குறுதிகள் அளித்தனர். நகை கடன் தள்ளுபடி , விவசாய கடன் தள்ளுபடி , குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம், முதியோர் உதவி தொகை உயர்த்துவோம் என கூறினார்கள். இது வரை செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய், பொங்கல் தொகுப்பு வழங்கினோம். மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடினர்.
தற்போது ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்கவில்லை. தரமற்ற பொங்கல் தொகுப்பு கொடுத்துவிட்டனர். விவசாயிகளிடம் 15 ரூபாய்க்கு கரும்பு வாங்கி 33 ரூபாய் பில் போட்டு கொள்ளையடித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பி.என்.பட்டி, வீரக்கல்புதூர், நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டலங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

