ஸ்டாலின் வரார்… விடியலை தரார்… என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் இன்றுவரை விடியலை தரவில்லை என பிரசாரக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், தெற்கு மாவட்டம் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். திருநின்றவூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் 5 லட்சம் ஏழை-எளிய மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டது. தி.மு.க.வின் 2006-2011 ஆட்சி காலம் மின்சார தட்டுப்பாடு முழுமையாக இருந்த மாநிலமாக தமிழகம் விளங்கியது.
புரட்சித்தலைவி ஆட்சி பொறுப்பேற்றவுடன் மின்தடை இல்லாத மாநிலமாக மாற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத ஆட்சியாக மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க. உள்ளது.
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கொடுத்த வாக்குறுதினால் தி.மு.க. வை நம்பி மக்கள் கடனாளியாக மாறி உள்ளனர்.
பொங்கல் சிறப்பு தொகுப்பு வெறும் காற்றடைத்த பையாகவே உள்ளது. பொங்கல் சிறப்பு தொகுப்பை தமிழகத்தில் கொள்முதல் செய்தால் அதன் உண்மை விலை தெரிந்துவிடும் என்று வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் வரார்… விடியலை தரார்… என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் இன்றுவரை விடியலை தரவில்லை. தமிழகத்தில் தற்போது இருண்ட ஆட்சியே நடைபெற்று வருகிறது.
இதுதொடண்டர்களுக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி அடைய செய்வது அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் ஜே.சி.டி. பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின், முன்னாள் எம்.எல்.ஏ. அலெக்ஸ்சாண்டர், முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், புரட்சிபாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

