முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வை முதலில் நடந்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

277 0

ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அநீதி.
ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்காது.
உயர்நீதிமன்றத் தடையை விலக்கச் செய்து முதலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வையும், பின்னர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வையும் நடத்த வேண்டும். அது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு, சமநீதி வழங்குவதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.