கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரம் பேர் தபால் வாக்குசீட்டு கேட்டு விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
இதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நாளன்று, பணியில் இருப்பதால் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரம் பேர் தபால் வாக்குசீட்டு கேட்டு விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தபால் வாக்குப்பெறுவதற்கான விண்ணப்பங்கள் முதல்கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கியதில் இருந்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.
2-ம் கட்ட பயிற்சி வகுப்புகளிலும் அலுவலர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதுவரை 4 ஆயிரம் பேர் தபால் வாக்குசீட்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு அஞ்சல் மூலம் தபால் வாக்குசீட்டு அனுப்பி வைக்கப்படும்.
தேர்தல் பணியாளர்கள் தவிர்த்து காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கும் தபால் வாக்குசீட்டு வழங்கப்படும். தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் நடத்த வாய்ப்புள்ளது. அதேபோல காவல்துறை சார்பில் போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு சிறப்பு முகாம்கள் நடத்த வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

