நாமக்கல் பண்ணைகளில் 9 கோடி முட்டைகள் தேக்கம்

267 0

ஒரே நாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசு குறைக்கப்பட்டுள்ளது பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள 1,000 பண்ணைகளில் உள்ள 5 கோடி கோழிகள் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்ய வேண்டும்,

இந்த முட்டை கொள்முதல் விலையானது தட்ப வெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஜனவரி 31-ந் தேதி கொள்முதல் விலை 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 3-ந் தேதி 10காசு உயர்ந்து 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த 7-ந் தேதி 460 காசாக சரிந்தது.

இந்த நிலையில் நேற்று மேலும் 20 காசு குறைக்கப்பட்டு கொள்முதல் விலை 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் கொள்முதல் விலை 20 காசு குறைக்கப்பட்டுள்ளது பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

வட மாநிலங்களுக்கு தினமும் 50 முதல் 60 லட்சம் முட்டை அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு லோடு கூட போகவில்லை. காரணம் நாமக்கல் மண்டலத்தின் கொள்முதல் விலையைவிட அங்கு 20 முதல் 30 காசு வரை குறைவு. அந்த விலைக்கு நாம் சப்ளை செய்ய முடியாது.

மேலும் முட்டை உற்பத்தியும், 50 லட்சம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தமிழக பண்ணைகளில் 9 கோடி முட்டை தேக்கம் அடைந்துள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதனால் 2 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசு சரிந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீராகி கொள்முதல் விலை உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.