வடபழனி முருகன் கோவில் நிலம் அபகரிப்பு: தந்தை-மகன்கள் மீது வழக்கு

423 0

சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்பட ரூ.258 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த புகாரில், வானூரை சேர்ந்த தந்தை-மகன்கள் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில், வட பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் வடபழனி முருகன் கோவிலுக்கு தானமாக கொடுத்தது ஆகும். இந்த நிலத்திற்கு அருகில் உள்ள 5 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மொத்தம் 14 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.258 கோடி ஆகும்

இந்த சொத்தை ஆக்கிரமித்தவர்கள் அதை தங்களது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ததோடு, அதற்கு உரிய பட்டா கேட்டு தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் புகாரில் தகவல் வெளியானது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த நிலத்தை ஆக்கிரமித்து அபகரித்ததாக புகார் கூறப்பட்ட விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கோரைக்கேணி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி, அவரது மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோர் அந்த நிலத்தை விற்பதற்கு விலை பேசி வருவதும் தெரிய வந்தது.

கோவில் நிலம் என்பதை மறைத்து, மேற்கண்ட நபர்களுக்கு அந்த நிலத்தை பத்திரபதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் விவேகானந்தன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. அவர் சேலையூர் சார்பதிவாளராக இருந்த போது, இந்த மோசடிக்கு துணை போனது தெரிய வந்தது. தற்போது அவர் வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

கோவில் நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்ததாக சார்பதிவாளர் விவேகானந்தன், மற்றும் நிலத்தை அபகரித்த மணி, ரமேஷ், கந்தசாமி ஆகிய 4 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.