கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”கல்முனை வலயப் பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைகள் வழங்கும் செயற்பாடு கவனிப்பாரற்ற நிலையில் இருந்து வருகிறது. அதேவேளை செல்வாக்குள்ளோர் மாத்திரம் அதனை உள்வழியால் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு சம்பள நிலுவை வழங்காமைக்கு நிதிப்பற்றாக்குறையே காரணம் எனவும் இதற்காக மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிதி ஒதுக்கவில்லை எனவும் கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கூறி வருகின்றார்.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத்தரக் கோரி எமது இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தினால் 08.11.2016 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை உரிய நடவடிக்கையின் பொருட்டு மாகாண கல்விச் செயலாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆளுநரினால் எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கல்முனை வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவரால் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அவை பற்றிய எந்தத் தகவல்களையும் எங்களுக்கு அறியத் தரவுமில்லை. இதனையிட்டு எமது சங்கம் மிகவும் மனவேதனை அடைகின்றது.
ஆசிரியர்களின் நலன் மேன்பாட்டிற்காக செயற்படும் எமது இலங்கை மகா ஆசிரியர் சங்கமானது அநீதி இழைக்கப்பட்டுள்ள கல்முனை வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்காக குரல் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு கொண்டதாக உள்ளது.
எனவே எங்களது கோரிக்கையினை மாகாண ஆளுனர், தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவருக்கு மீண்டும் ஒரு மகஜரை அனுப்பி வைத்துள்ளோம். இக்கோரிக்கைக்கு வலுவூட்டு வகையில் எமது சங்கமானது விரைவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானம் எடுத்துள்ளது” என்றார்.

