மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்த வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள மீனவர் ஓய்வு கட்டிடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூர்த்தி வங்கிகளில் 2700 மில்லியன் ரூபா சேமிப்பில் உள்ளது. அதற்கு பொறுப்பான அதிகாரி அந்த பணத்தை வைத்துக்கொண்டு அடைகாக்கின்றார்.
இவ்வாறு இந்த பணம் விடயத்தில் குஞ்சுகளை அடைகாப்பதுபோல் அடைகாக்கும் அதிகாரிகள் தொடர்பில் இந்த அரசியல்வாதிகள் பேசவில்லையென்றால் தமிழ் மக்களுக்கு அவர்களும் இணைந்து துரோகம் செய்கின்றனர் என்ற விடயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதிகமாக சேமித்து வைத்துள்ளோம் என தேசியத்தில் சொல்வதற்காகவும் அதன் அமைச்சரிடம் கைதட்டல் எடுக்கவேண்டும் என்பதற்காகவும் கிட்டத்தட்ட 270கோடி ரூபாவை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளில் நிரந்தர வைப்பில் வைத்துக்கொண்டு அடைகாக்கும் செயற்பாடுகளை இந்த அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டிய பொறுப்பு இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது என்றார்.

