காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பறக்கும் படைகள் அமைப்பு- தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

158 0

வீடுவீடாக சென்று 3 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும், அரசியல் கட்சியினர் உள்ளரங்கத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் 50 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலெக்டர் ஆர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் பதற்றமான 88 வாக்குச் சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்படும்.

இவை தவிர மீதமுள்ள 296 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3,64,086 பேர் வாக்களிக்க உள்ளனர்.1536 பேர் வாக்குப்பதிவு அலு வலர்களாக செயல்பட உள்ளனர்.

மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 8 பேர் வீதம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் செயல்பட்டு வருகிறது.

தேர்தல் பணிகளை கண்காணிக்க இணை இயக்குநர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் உள்ளூர் தேர்தல் பார்வையாளர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது.

புகார்கள் மற்றும் குறைகளை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என கண்காணிக்க சுகாதாரத் துறையின் மாவட்ட துணை இயக்குநர் சித்ர சேனா செயல்படுவார்.

வீடுவீடாக சென்று 3 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும், அரசியல் கட்சியினர் உள்ளரங்கத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் 50 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். அந்த இடத்தின் விபரங்களை கொரோனா கட்டுப்பாட்டு அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் அரசுப் பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான முதல் கூட்டம் மார்ச் மாதம் 2-ந் தேதியும், மேயர் மற்றும் நகர் மன்ற தலைவர்கள் தேர்வு வரும் மார்ச் மாதம் 4-ந் தேதியும் நடத்தப்படும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் இதுவரை 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறினார்.