போலீஸ் அதிகாரிகளை இடமாற்றத்துக்கு எதிராக அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

211 0

அரசியல் காரணமாக தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல என்றும், தனிநபர் நல வழக்கு என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வின் தேர்தல் பிரிவு துணை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., ஐ.எஸ்.இன்பத்துரை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு தான் அதிகாரம் உள்ளது. ஆனால் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் காவல்துறையில் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ் வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இடமாற்றம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகள், நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இல்லை என்றும், அதிகாரிகள் மீது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஏற்கனவே 17 அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினர்.

பின்னர், மனுதாரர் யார் என நீதிபதிகள் கேட்டதற்கு, அவர் வக்கீல் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வக்கீல்கள் பொதுநல வழக்குகள் தொடர்வதை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அரசியல் காரணமாக தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல என்றும், தனிநபர் நல வழக்கு என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பொதுநல வழக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக இன்பதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.