முற்றவெளியில் நடந்த ஒரு பொங்கலும் சந்தையும்

424 0

கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு பெயர் விடுதலைப் பொங்கல். அரசியல் கைதிகளை விடுவிக்கப்  போராடும் அமைப்பாகிய குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பு அப் பொங்கல் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு அருகில் ஒரு சிறிய சிறைக்கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது.அதற்குள் கைதிகளின் உடைகளை அணிந்தபடி செயற்பாட்டாளர்கள் பொங்கல் நிகழ்வை நடத்தினார்கள். நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏனைய அரசியல் வாதிகளையும் அழைத்ததாக ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள். ஆனால் அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச்சில அரசியல்வாதிகளே காணப்பட்டார்கள். ஐங்கரநேசன், சிவாஜிலிங்கம், யாழ் நகரபிதா மணிவண்ணன் ,பார்த்திபன் உள்ளிட்ட மிகச் சில அரசியல்வாதிகளும் இரு மதத்தலைவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.அரசியல் கைதிகளை நோக்கி பொது மக்களின் கவனத்தையும் வெளி நாடுகளின் கவனத்தையும் ஈர்ப்பது அந்த வித்தியாசமான பொங்கலின் நோக்கமாகும்.

தமிழ் பரப்பில் நடக்கும் பெரும்பாலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்திகளாக வருவதோடு சரி.அவை பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதை விடவும் ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வு துறையினரின் கவனத்தைத்தான் அதிகமாக ஈர்க்கின்றன.எனவே ஒரு கவனஈர்ப்புப் போராட்டத்தை ஒழுங்குசெய்யும் பொழுது அங்கே அதிர்ச்சியூட்டும் புதுமை இருக்க வேண்டும் என்று அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் குரலைற்றவரின் குரல் அமைப்புக்கு ஆலோசனை கூறியிருந்தார். இவ்வாறு ஆலோசனை கூறப்பட்டது கடந்த ஆண்டில் ஆகும். மேலும் அது போன்று வேறு சில வித்தியாசமான படைப்பு திறன்மிக்க கவனயீர்ப்பு போராட்டங்களை ஒழுங்கு செய்யுமாறும் ஆலோசனை கூறப்பட்டது. தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் கைதிகளின் உடையோடு கைதிகள் சிறையில் பயன்படுத்தும் சாப்பாட்டுக் கோப்பையோடு நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்யலாம் என்பது ஒன்று.

மற்றது தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட வழக்கறிஞர்கள் கைதிகளின் உடையோடு ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களையோ அவ்வாறு வித்தியாசமான ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நோக்கித்  திரட்டும் அளவுக்கு அரசியல் கைதிகளுக்காகப் போராடும் அமைப்பிடம் ஆட்களும் இல்லை வளங்களும் இல்லை.

இவ்வாறானதொரு வெற்றிடத்தில் கடந்த 13ஆம் தேதி ஒழுங்கு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு பொங்கலுக்கு வழமையாக போராட்டங்களில் காணப்படும் மிகச் சில அரசியல்வாதிகளே வருகை தந்திருந்தார்கள்.பொதுமக்கள் என்று பார்த்தால் இல்லை என்று சொல்லுமளவுக்கே நிலைமை இருந்தது.

 

இவ்வாறு முற்றவெளியில் மிகச்சிறு தொகையினர் ஒரு கவனயீர்ப்பு பொங்கலை நடாத்திக் கொண்டிருக்க, அதிலிருந்து நடந்து போகும் தூரத்தில் இருந்த யாழ் நகரப்பகுதியில் பொங்கலுக்கான  ஏற்பாடுகள் அமோகமாக காணப்பட்டன.பொங்கலுக்கு முதல் நாளான அன்று யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் ஜனங்களால் பிதுங்கி வழிந்தன.கடந்த 12 ஆண்டுகளில் அமோகமாக கொண்டாடப்பட்ட பொங்கலில் அதுவும் ஒன்று.நாட்டில் பொருளாதார நெருக்கடி என்று ஒன்று உண்டா என்று கேட்குமளவுக்கு எல்லா நகரங்களும் ஜனங்களால் பிதுங்கி வழிந்தன.

இது நடந்து சரியாக எட்டு  நாட்களின் பின் கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் அதே முத்தவெளியில், 12 ஆவது யாழ். சர்வதேச வர்த்தகச் சந்தை திறக்கப்பட்டது.சந்தை நடந்த மூன்று நாட்களிலும் லட்சக்கணக்கானவர்கள் திரண்டார்கள். மக்கள் வெள்ளம் பொங்கி வழிந்தது. சந்தைக்குள் பெரும்பாலும் மாலை வேளைகளில் உள்ளிட முடியாத அளவுக்கு ஜனத்திரள்  பிதுங்கியது.குறிப்பாக இளைஞர்கள் வேண்டுமென்றே வரிசைகட்டி ஒருவர் மற்றவரின் தோளில் கைகளை வைத்தபடி பெண்கள் அதிகம் உள்ள பகுதிகளை நோக்கி புகையிரதம் ஓடி அட்டகாசம் செய்தார்கள்.

 

இவ்வாறாக பொங்கலுக்கு முதல் நாளும் பொங்கல் அன்றும் பொங்கலில் இருந்து ஒரு கிழமை கழித்தும் முற்றவெளியில் நடந்தவைகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. மக்கள் கொண்டாட விரும்புகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் அதை அட்டகாசமாக அனுபவிக்கிறார்கள். அதில் பிழையில்லை. மக்கள் கொண்டாட வேண்டும். அதே சமயம் தங்களுக்காக போராடி சிறையில் இருப்பவர்களுக்குப் பொங்கல் இல்லை என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியோரங்களில் ஆண்டுக்கணக்காக இப்பொழுதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நினைத்துப் பார்க்கவேண்டும்.  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காவும் அரசியல் கைதிகளுக்காகவும் காணிகளை அபகரிக்கப்படுவதை எதிர்த்தும்  நடக்கும் போராட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதற்குப்  பொதுமக்கள் பொறுப்பில்லை.மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியை நோக்கியும் ஆபத்தில்லாததை நோக்கியும் சுகமானதை நோக்கியும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை இலட்சியத்தை நோக்கி, கனவுகளை நோக்கித் திரட்ட வேண்டியது அரசியல்வாதிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும்தான். அதைச் செய்ய வேண்டியவர்கள் செய்யத் தவறிய ஒரு வெற்றிடத்தில் தான்,அவ்வாறு யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் ஒரு கவனயீர்ப்பு பொங்கல் நடந்து முடிந்தது.

பொதுமக்களின் கவனத்தையும் வெளி உலகத்தின் கவனத்தையும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் ஈர்க்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக சிந்திக்கப்பட்ட ஒரு பொங்கல் மக்கள் மயப்படவில்லை மட்டுமில்லை,அதைக்  குறித்து மக்கள் மத்தியில் பெரியளவில் உரையாடப்படவும் இல்லை. இது அதை ஒழுங்கு படுத்திய அமைப்பின் தோல்வி மட்டுமல்ல,தமிழ் அரசியலின் தோல்வியும்தான்.

கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்ப் பரப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுவரும் பெரும்பாலான கவனயீர்ப்பு போராட்டங்கள் இவ்வாறுதான் காணப்படுகின்றன. அவை அடுத்தநாள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வருவதோடு சரி. எந்த மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவை ஒழுங்கு செய்யப்படுகின்றனவோ ,எந்த அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவை ஒழுங்கு செய்யப்படுகின்றனவோ,எந்த வெளியுலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவை ஒழுங்கு செய்யப்படுகின்றனவோ அந்த வெளியுலகத்தின் கவனத்தையோ அல்லது மக்களின் கவனத்தையோ அல்லது அரசியல்வாதிகளின் கவனத்தையோ அவை பெரும்பாலும் ஈர்ப்பதில்லை என்பதே கடந்த 12 ஆண்டுகால அனுபவமாக காணப்படுகிறது.

அரசியல் கைதிகளுக்காக ஒன்றில் அரசியல் கைதிகள் போராடுகிறார்கள். அல்லது விடுவிக்கப்பட்ட கைதிகள் போராடுகிறார்கள். அல்லது கைதிகளின் உறவினர்கள் போராடுகிறார்கள்.மிக அரிதாகத்தான் பொது மக்களும் ஏனைய அமைப்புக்களும் அந்தப் போராட்டத்தில் இணைகின்றன. அவ்வாறு இணையும் பொழுது அது அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அப்படித்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும். அங்கேயும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்போராட்டத்திலும் எப்போதாவது அரிதாக பொதுமக்கள் இணைகிறார்கள். அப்படித்தான் காணிக்கான போராட்டமும். காணி உரிமையாளர்களும் சில அரசியல்வாதிகளும்தான் தொடர்ந்து போராடுகிறார்கள். இவை யாவும் மக்கள் மயப்பட்ட போராட்டங்கள் அல்ல. இப்போராட்டங்களை மக்கள் மயப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூகங்களுக்கும் உண்டு. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதை குறித்து யாரிடமும் சரியான பார்வையும் தெளிவான வழிவரைபடமும் இருப்பதாக தெரியவில்லை.

இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்பின்றி போராடத் தெரியவில்லையா? அல்லது போராட முடியவில்லையா? சில எழுக தமிழ் கள்,ஒரு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டம் போன்ற தெட்டந்தெட்டமான போராட்டங்களுக்கும் அப்பால் தொடர்ச்சியாகப் போராட தமிழ்மக்களால் முடியவில்லை.கேப்பாபுலவில் காணிகளை மீட்பதற்காக நடந்த போராட்டத்தைப் போலவோ,டெல்லியில் வேளாண் மசோதாவை எதிர்த்துப் போராடிய விவசாயிகளைப் போலவோ,அல்லது குறைந்தபட்சம் இலங்கை தீவில் அண்மையில் அதிபர் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு ஒரு பெருந்தொற்றுச் சூழலுக்குள் போராடிய ஆசிரிய தொழிற்சங்கங்களைப் போலவோ,தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப்  போராடினால்தான் அரசாங்கத்தையும் வெளி உலகத்தையும் தங்களை நோக்கித்  திரும்பலாம்.

தெட்டந் தெட்டமாக நடக்கும் எழுகதமிழ்களோ அல்லது P2Pக்களோ அரசாங்கத்தின் கவனத்தையோ அல்லது வெளியுலகின் கவனத்தையோ தொடர்ச்சியாக ஈர்த்து வைத்திருக்கத் தவறிவிட்டன. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டம் முடிந்த கையோடு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் பெரும்பாலானவர்கள் அதைக்குறித்து ஒருவித பிரமிப்போடு அல்லது ஆர்வத்தோடு கேள்விகளைக் கேட்பார்கள். ஆனால் அதுவும் எழுக தமிழ்களைப் போல ஒரு தொடர்ச்சியற்ற போராட்டம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

எனவே கடந்த 12 ஆண்டுகளையும் தொகுத்துப்பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது ஒப்பீட்டளவில் பெரிய ஆர்ப்பாட்டங்களையும் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களையும் பொதுமக்கள் அமைப்புக்களே  முன்னெடுத்துள்ளன.அநேகமாகக் கட்சிகள் அல்ல. கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான அமைப்பு ஆகிய மூன்று மக்கள் அமைப்புக்கள் தோன்றி பின் தொடர்ந்து வளராமல் தேங்கிவிட்டன. இத்தேக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் போதாது என்பதைத்தான் பொங்கலுக்கு முதல்நாள் நடந்த விடுதலைப் பொங்கலும்   உணர்த்துகிறது. அதேசமயம் இன்று கிட்டு பூங்காவில் நடக்கவிருக்கும் போராட்டம் உணர்த்தப் போவது எதனை?

நிலாந்தன்