டொலரை தேக்கி வைக்கிறது மத்திய வங்கி

240 0

கடன் கொடுத்தவர்களுக்கு முழுமையாகவும் சரியான நேரத்திலும் கடனை செலுத்துவதற்காக டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைபிடிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் இன்று (29) வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது,

இலங்கை முன்னொருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஒரு நாட்டு மக்களாக இந்த சவாலினை மேற்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய ஒரு தேவையுள்ளது.

அதேவேளை இந்த நெருக்கடியினை தீர்ப்பதற்கு அரசாங்கம் கையாளும் வழிமுறைகள் மிக முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசாங்கமானது வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதானது, எமது மக்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் கையிருப்பை இல்லாமற் போக செய்கிறது.

இறுதியாக ஒரு நாட்டின் பெருமையானது கடன்களை மீள்செலுத்துவதில் மாத்திரம் தங்குவதில்லை. மாறாக எந்தவொரு குடிமகனும் பசியோடு தூக்கத்திற்கு செல்லலாம் இருப்பதனை உறுதி செய்வதிலும் தங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு இலங்கை மக்கள் தொடர்பில் எமக்கு இருக்கும் பொறுப்பினை உணர்த்தவர்களாக இலங்கையிலுள்ள ஆறிற்கும் அதிகமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த சூழ்நிலையினை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த 27ஆம் திகதி  கலந்தாலோசனை ஒன்றினை நடாத்தியிருந்தோம்.

பாராளுமன்றத்தின் பொது நிதி குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் சக பாராளுமன்ற அங்கத்தவர்களை நான் அணுகியிருந்தேன்.

கூடி வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதி தொடர்பில் பாராளுமன்றமானது முழு அதிகாரத்தினையும் கொண்டிருக்க வேண்டும் என்ற தெளிவினையும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையில் பொது நிதியானது சரியாக பயன்படுத்தப்படுவதனை உறுதி செய்யும் சட்டரீதியான கடப்பாட்டினையும் கொண்டவர்கள் என்பதனை அறிந்தவர்களாகவும் கூடி வந்தனர்.

நாட்டின் தரப்படுத்தலானது சர்வதேச கடன் சந்தையில் கறுப்புப் பட்டியலில் இடம்பெறுமளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

2020 ஏப்ரல் மாதத்திலிருந்து பிணைமுறியை வைத்து சர்வதேச சந்தையில் கடன் இலங்கை கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது

இந்த பின்னணியில் அமெரிக்க டொலரில் கடன் மீள்செலுத்துவதானது, பாவனைக்குட்படுத்த கூடிய டொலரின் கையிருப்பானது ஒரு மாதத்திற்கான இறக்குமதிக்கு கூட போதாததொன்றாக வீழ்ச்சி அடைந்துள்ளது – சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெற்ற பாரிய வீழ்ச்சி இதுவாகும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கெதிரான கடன் வட்டி வீதமானது 2020ல் 70% ஆக இலங்கை வரலாற்றிலே மிக உச்சமாக பதிவு செய்யப்பட்டதுமல்லாமல், உலகத்திலே உச்சமான வீதங்களிலேயும் இடம்பெற்றது ஆகும்

இலங்கை உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான பொது கடன் சுமையானது 120% மாக ஒரு பாரிய ஏற்றமாக காணப்பட்டது இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 % உயர்வாகும்.

இந்த ஒவ்வொரு நிலைமைகளும் தனித்தனியாக பாரிய பொருளாதார பிரச்சினைகளை எடுத்துக்காட்டும். இவை சேர்ந்து இடம்பெறுவதானது எமது எதிர்காலத்திற்கு குறுகிய மற்றும் நீண்டகால அச்சுறுத்தலினை ஏற்படுத்துகின்றது

இந்த பின்னணியில் கடன் கொடுத்தவர்களிற்கு முழுமையாகவும் சரியான நேரத்திலும் கடனை செலுத்துவதற்காக டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைபிடிக்கின்றது

இது எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான டொலரின் பற்றாக்குறைக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் உணவு,மருந்து, மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியை குறைந்ததுமுள்ளது.

இந்த பற்றாக்குறையின் எதிரொலியினை அத்தியாவசிய பொருட்களிற்கான நீண்ட வரிசைகளிலும் தொடர் மின் துண்டிப்பிலும் நாம் கண்டோம். அரசாங்கமானது டொலர் கையிருப்பினை உறுதி செய்யும் வகையில் மாற்று வழிமுறைகளை கையாளவில்லை என்றால் இந்த நிலைமை மேலும் மோசமடையும்.

இந்த அரசியல் தலைவர்கள் குழுவானது, இலங்கை மக்களுக்கு நிலையான தீர்வுகள் ஊடாக நீதியை நிலை நாட்டுவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து இணைந்து செயலாற்ற இணங்கினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.