எமது மக்களை நாமே ஆளக்கூடிய சூழலை உருவாக்குவோம் – எம்.ஏ.சுமந்திரன்!

231 0

sumanthiran-720x480தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சூழலை புதிய அரசியல் யாப்பின்மூலம் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வேதநாயகன் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா? தமிழ் மக்களாகிய நாங்கள் எம்மை நாமே ஆளக்கூடிய புதிய ஆட்சிமுறை புதிய அரசியல் யாப்பின்மூலம் கொண்டுவரப்படுமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தீர்வுத் திட்டத்தை இலகுவாகப்ப பெற்றுக்கொள்ளமுடியும் என நாங்கள் நினைக்கவில்லை. அதன் காரணமாகவே மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் அதனை நடாத்திமுடிக்கவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எங்களின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளது. அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யவேண்டிய பொறுப்புள்ளது.

ஒரு தீர்வுக்காக பல உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறோம். போராளிகளை மாத்திரமல்ல மக்களையும் இழந்திருக்கிறோம். அவ்வாறான தியாகங்களை செய்த எங்களினால் தீர்வினைப் பெற முடியாமல் போகுமா என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது. தமிழ் மக்களை அழித்தொழித்துவிடுவார்கள்; தமிழர்களுக்கு நியாயமானதை தரமாட்டார்கள் என்ற காரணத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

இந்த நாட்டின் சிறுபான்மையின மக்களின் வாக்குப் பலத்தினால் அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்; அதேநம்பிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பாரம் கொடுத்துள்ளனர்; அதனாலேதான் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

தற்போதுள்ள தடங்கலையும் தாண்டி பயணிப்பதற்கு சர்வதேச சக்தியே எமக்கு பக்கபலமாக உள்ளது. இதிலிருந்து அரசாங்கம் தவறமுடியாது. அதேபோல் பெரும்பான்மையின மக்களும் மறுதலிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இன்று உலகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.