இந்திய அரசே! தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டின் தடையை நீக்கு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

254 0

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டை (ஏறுதழுவல்) தடைசெய்தமையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தொன்மையான கலாச்சாரங்களை முடக்க வேண்டாம் என இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு தடையை நீக்கும்படி பண்போடும் பணிவோடும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் சல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகின்றன.

காளைச்சண்டை (Bullfighting) என்று அழைக்கப்படும் விளையாட்டு ஸ்பெயின், போத்துக்கல், பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியிலும், தென் அமெரிக்க நாடுகளான மக்சிக்கோ, கொலம்பியா, எக்குவடோர், வனென்சுவேலா மற்றும் பெரு போன்ற நாடகளில் நடைபெறுகின்றது. இங்கு காளைகளை படுமோசமாகக் குத்திச் சித்திரவதை செய்து கொல்வார்கள். இந்த விளையாட்டை இரத்த விளையாட்டு என்றும் இங்கு அழைப்பார்கள். ஆனால் இந்த நாடுகளில் Bullfighting க்குத் தடை இல்லை, ஏனெனில் இது அவர்களது பாரம்பரிய கலாச்சார விளையாட்டு என்பதால்.

தமிழர்களின் பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. இங்கு காளைகள் கொல்லப்படுவதில்லை. காளைகளைப் படுமோசமாகச் சித்திரவதை செய்வதில்லை.

காளைகளை ஓடவிட்டு அதை மனிதர்கள் விரட்டிச்சென்று அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது, காளைகளின் திமில் மீது தொங்கியபடி சிறிது தூரம் செல்வதே இவ்விளையாட்டு ஆகும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று, அதற்கு ஆதரவாக களத்தில் பல நூறு ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும் தமிழகத் தமிழ் உறவுகளுக்குப் பலம் சேர்க்கும் வகையிலும் தமிழரது கலாச்சாரப் பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் என்ற ரீதியிலும் சல்லிக்கட்டுத் தடையை நீக்க இந்திய அரசிற்கு தாழ்மையான கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!