ஓமந்தையில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேறவில்லை!

231 0

omanthaiஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.

ஓமந்தையில், கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வந்த இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன, அகற்றப்பட்டதையடுத்து, அந்தப் பகுதி காணிகள் வவுனியா அரசாங்க அதிபரிடம் நேற்று கையளிக்கப்பட்டன.

ஓமந்தையில் 1992ம் ஆண்டு நிறுவப்பட்ட இராணுவ முகாம் பின்னர், 2002ம் ஆண்டு மார்ச் 22ம் நாள், வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் பொதுமக்களுக்கான சோதனைச்சாவடியாக மாற்றப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர், இந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது.இந்த நிலையில், பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடியைக் கைவிட்டு படையினர் வெளியேறியுள்ளனர்.

மொத்தம் 19 ஏக்கர் காணிகளில் 16 ஏக்கர் காணிகளை நேற்று வவுனியா அரச அதிபரிடம் இராணுவத்தினர் கையளித்துள்ளனர்.

எஞ்சிய 3 ஏக்கர் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இந்தக் காணிகள் விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

அதேவேளை, ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடி முற்றாக அகற்றப்படாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்குப் பகுதியில் உள்ள காணிகளை மாத்திரமே இராணுவத்தினர் கையளிப்பர். நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருப்பர்.

காணிகளை விடுவிக்கும் இந்த முடிவு சடுதியாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல. தனியார் காணிகளை விட்டு வெளியேறும் நடவடிக்கைகள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற ஒன்று தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.