சரணாலயத்தில் அத்துமீறி நுழைந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

208 0

1952832583gunவஸ்கமுவ தேசிய சரணாலய பகுதியில் அத்துமீறி நுழைந்த குழுவொன்றுக்கும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வஸ்கமுவ தேசிய சரணாலயத்தில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த சிலரை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பரிசோதிக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அந்தக் குழுவினர், அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பின்னர் இரு தரப்பினராலும் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அத்துமீறி நுழைந்த குழுவினரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவரை வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, பலியாகியதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் துனுவிலபிடிய – மெதகந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவராகும்.

இதேவேளை, உயிரிழந்தவர் வசம் இருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை வில்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.