இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு தீவிரம் பெற்றுள்ள நிலையில், சுப்பர்மார்க்கெட்டுகளில் விறகுக் கட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இலங்கை அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டில் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. பல பொருள்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது சமையல் எரிவாயு தொடர்பில் மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். ஒருபுறம் எரிவாயு சிலிண்டருடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மறுபுறம் சந்தையில் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

அந்நியச் செலாவணிக் கையிருப்புப் பற்றாக்குறையால் இறக்குமதியாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றமையால் இந்த நிலைமை தொடரும் என்றே நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மண்ணெண்னையின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளாதால், மண்ணெண்ணை அடுப்புப் பாவனையும் மக்களுக்கு சிரமாகியுள்ளது. இந்தநிலைமையில் பெரும்பாலான மக்கள் மீண்டும் விறகு அடுப்புப் பாவனைக்குத் திரும்பியுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் விறகு விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில், கொழும்பில் உள்ள சுப்பர்மார்க்கெட் ஒன்றில் விறகுக் கட்டைகள் விற்பனைகக்கு வந்துள்ளன. ஒரு கட்டு விறகு 150 ரூபா முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

