வறட்சி காலத்தில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள ஐநா

283 0

580918237500நாட்டில் ஏற்படக் கூடிய வறட்சியான நிலையின் போது, மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து ஆராய, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளது.
வருங்காலத்தில் ஏற்படக் கூடிய வறட்சியின் போது, பாதிக்கப்படும் இலங்கையர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை நிறுவனங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என, இலங்கைக்கான ஐ.நா குடியுரிமை பிரதிநிதி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஊனா மெக்கல்லோ (Una McCauley) குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஐநா குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், வறட்சி நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக செயலணியொன்றை அமைத்தமை தொடர்பாகவும் அந்தக் குழுவினர் ஜனாதிபதியை பாராட்டியுள்ளனர்.

அனர்த்த நிலை குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அவர்கள் இச் சந்தர்ப்பத்தில் உறுதியளித்தனர். இதன் முதற்கட்டமாக வறட்சி நிலை தொடர்பான தொடர்பாடல், மதிப்பீடு மற்றும் மேற்பார்வை நடிவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணர்களை வழங்க முடியும் என ஐ.நா பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மக்களுக்குத் தேவையான குடிநீர்களை வழங்க போதுமான தண்ணீர் பவுச்சர்களை வழங்குதல், உணவு மற்றும் சுகாதார சேவைகளுக்காக வறட்சியின் போது பாதிக்கப்பட்ட மக்கள் கடன்களை பெறுவதை தவிர்த்து அவர்களுக்கு பாதுகாப்பான வருமான மார்க்கத்தை அறிமுகப்படுத்தல் போன்ற குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மக்கள் பாதிக்கப்படும் போது, கரிசனையான தலையீடுகளை மேற்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜனாதிபதி தனது நன்றிகளை தெரிவித்துள்ளதாக, ஐனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.