பாதகமான நிபந்தனைகளின் அடிப்படையிலா ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகிறது?

234 0

1891751509GSPஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 58 நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளதாக வௌியான செய்திகளை மறுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை, நாட்டினுள் நல்லாட்சி, மனித உரிமைகள் மற்றும் பேண்தகு அபிவிருத்திகளை நிறுவுதல் போன்ற தற்போதைய அரசாங்கத்தின் முற்சிகளுக்காக பெற்றுக் கொடுக்கப்படும் ஊக்குவிப்பு எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவதாக, கடந்த 11ம் திகதி வௌியிட்ட அறிக்கை ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டிருந்தது.

மேலும், குறித்த சலுகை இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நிபந்தனைகளுக்கு இணங்கியமையால் அல்ல, மரியாதை அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டிருந்தது எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவது தொடர்பான கலந்துரையாடலின் போது, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை தௌிவுபடுத்தியிருந்தது.

இதன்படி இந்த நிலைப்பாடுகளுக்கு இணங்கியே ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நாட்டுக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க தீர்மானித்தது எனலாம் எனவும், அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.