அரசாங்கம் நுகர்வோரின் நியாயமான கவலைகளை நிவர்த்தி செய்ய தவறியது – அனுரகுமார திஸாநாயக்க

274 0

டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு வழங்கப்பட்ட சீல் செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறும் நுகர்வோர் அதிகார சபையின் தீர்மானம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க இன்று கருத்து வெளியிட்டார்.

நுகர்வோரின் நியாயமான கவலைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நுகர்வோர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், சமையல் செய்யும் போது தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், காற்றோட்டத்திற்காக கதவுகளை திறக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் 430 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீல் செய்யப்பட்ட சிலிண்டர்களை மாத்திரமே ஏற்றுக் கொள்வதாக அதிகாரசபை கூறியுள்ள நிலையில், அவற்றை சேகரிப்பதற்காக நுகர்வோர் எரிவாயு சிலிண்டர்களை வாங்குகிறார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் நோக்கில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எந்த சிலிண்டர் வெடிக்கும் என்பதை கண்டறியும் வழிமுறைகள் அரசாங்கத்திடம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.