தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் (காணொளி)

472 0

battiமட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

நாட்டின் முதல் புனிதராக கிறிஸ்தவ மக்களினால் போற்றப்படும் புனித ஜோசப் வாஸ் ஆண்டாக இவ்வாண்டை, ஆயர்கள் சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதற்கமைய இவ்வருடத்தை புனித ஜோசப் வாஸ் ஆண்டாக மட்டக்களப்பு மறை மாவட்டமும் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பான விசேட நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் புனித ஜோசப் வாஸ் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதற்கான விசேட திருப்பலி பூஜை நடைபெற்றது.

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது  புனித ஜோசப் வாஸின் சிலையும் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தினை சேர்ந்த ஜே.எச்.இரத்தினராஜா எழுதியுள்ள “இலங்கையின் முதல் புனிதர் தூய ஜோசப்வாஸ்” என்னும் வரலாற்று நூலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அருட்தந்தை நவரெட்னம் அடிகளார் உட்பட பெருமளவான பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.